பேருந்துகளில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்
படியில் தொங்கியபடி செல்லும் மாணவர்கள்
கோவை புறநகர பகுதியான அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளுக்கு செல்லும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் பெரும்பாலும் பொது போக்குவரத்தையே நம்பி உள்ளனர்.இந்த நிலையில் அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை இருந்து குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே நகரப் பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.
இதன் காரணமாக காலை மற்றும் மாலை வேலைகளில் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பள்ளி கல்லூரி மாணவர்கள் விபரீதத்தை உணராமல் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.அன்னூர் போலீசார் அவ்வப்போது பேருந்துகளை தடுத்து நிறுத்தி மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்குவது,படிகளில் தொங்கியபடி பயணிக்க மாட்டோம் என மாணவ மாணவிகளை உறுதிமொழி ஏற்க செய்வது,வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மூலம் பேருந்து ஊழியர்களுக்கு அபராதம் விதிப்பது,வழக்கு பதிவு செய்வது என பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும் பேருந்துகள் பற்றாக்குறை காரணமாக மாணவ மாணவிகள் அதிவேகமாக செல்லும் தனியார் பேருந்துகளில் தொங்கியபடி பயணிப்பது தொடர் கதையாக இருந்து வருகிறது.
அசம்பாவிதங்கள் நிகழ்வதற்கு முன்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து காலை மற்றும் மாலை வேலைகளில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.