வெம்பக்கோட்டையில் பயிர் சேதம் குறித்த ஆய்வு கூட்டம்
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18ம் தேதிகளில் பெரும் பாலான பகுதிகளில் கன மழை பெய்தது. மேலும் இந்த கன மழையில் வெம்பக்கோட்டை பகுதிகளில் பெரும் பாலான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில் வெம்பக் கோட்டையில் உள்ள தாலுகா அலுவலகத்தில் 'தமிழக வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் தலைமையில் கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர் சேதம் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் மற்றும் சாத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர்.ரகுராமன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த பயிர் சேத ஆய்வுக் கூட்டத்தில் வெம்பக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களுடைய பகுதிகளில் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்து அமைச்சரிடம் எடுத்து கூறினார்கள் ஆய்வுக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் கடந்த 17 மற்றும் 18ம் தேதிகளில் பெய்த கன மழையின் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் ஹெக்டர் அளவிற்கு விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக முதல் கட்ட தகவல் கிடைக்க பெற்று உள்ளது என்றார்.
மேலும் பேசிய அமைச்சர் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங் களில் இயல்பு நிலை திரும்ப வேண்டும் எனவும் அதற்கு பின்னர் சேத மதிப்பீடு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு பின்னர் தமிழக அரசு அறிவித்த நிவாரணம் வழங்கப்படும் என்றார். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது எனவும் இன்னும் ஒரு சில பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரணம் மற்றும் உணவு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் அந்த பணிகளில் முடிந்த பின்னர் சேத மதிப்பீடு குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றார்.
மேலும் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொலைந்து போன ஆவணங்களை கட்டணமின்றி இலவசமாக மக்களுக்கு வழங்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார் மேலும் தொலைந்து போன ஆவணங்களை இலவசமாக பெற சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது என்றார்.