நீர்நிலைகளை மேம்படுத்துதல் குறித்து ஆய்வு கூட்டம்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்துதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் மற்றும் மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், ஓவர்சியர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம், தலைமையில் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மே-13ம் தேதி நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசிய போது. தற்போது உள்ள சூழலில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொது மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் ஒரு குளம் இருக்க வேண்டும் என்பதை இலக்காக வைத்து நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள நீர் நிலைகளை புனரமைக்க வேண்டும்.
நாம் ஒவ்வொருவரும் தற்போது இருக்கும் சூழலை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட்டு நம் எதிர்கால சந்ததியினருக்கு நீர்வளங்களை உருவாக்கித் தர அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். எதிர்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் சிறந்த சேவை இதைவிட வேறில்லை. கிராமப்பகுதிகளில் குடிநீர் வரவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தால் சம்மந்தப்பட்ட பகுதிகளின் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட்டு கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி ஒரு வார காலத்திற்குள் அதற்கான அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்தார். இக்கூட்டத்தில் ஊராட்சிகளுக்கான உதவி இயக்குநர் வீரமலை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வமணி, சேகர், வேப்பந்தட்டை வட்டாட்சியர் மாலதி, வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளின் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், ஓவர்சீயர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.