விவசாயிகளுக்கு மானிய விலையில் தக்கைப்பூண்டு - எம்.எல்.ஏ வழங்கல்

விவசாயிகளுக்கு மானிய விலையில் தக்கைப்பூண்டு - எம்.எல்.ஏ வழங்கல்

 தக்கைப்பூண்டு விதை தொகுப்பை வழங்கிய எம்.எல்.ஏ 

பேராவூரணி , சேதுபாவாசத்திரம் வட்டாரங்களில்  விவசாயிகளுக்கு மானிய விலையில் தக்கைப்பூண்டு விதை தொகுப்பை எம்எல்ஏ நா.அசோக்குமார் வழங்கினார் 

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் வட்டார விவசாயிகளுக்கு, தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறை சார்பில், முதலமைச்சரின் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தில் மானிய விலையில் தக்கைப்பூண்டு வழங்கும் விழா பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு தலைமை வகித்து எம்எல்ஏ நா.அசோக்குமார் பேசியது, இயற்கை உரங்களை பயன்படுத்தி நஞ்சில்லா உணவை விவசாயிகள் உற்பத்தி செய்ய வேண்டும். உணவு நஞ்சாவதால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. இயற்கை உரங்களை கைவிட்டதால் இன்றைக்கு பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகிறோம். நிலம் மலடாகி வருகிறது. இயற்கை எரு, மண்புழு உரம், இயற்கை பூச்சி விரட்டிகள், பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த வேண்டும் . நமது மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக உள்ளது.

தமிழக அரசின் வேளாண் துறையின் கீழ் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்டங்களை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெற வேண்டும். இயற்கை உரங்களை பயன்படுத்தி நஞ்சு இல்லா உணவுகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்று பேசினார். பேராவூரணி வட்டார வேளாண் அலுவலர் ராணி பேசுகையில், தற்போது விவசாயிகளுக்கு 50 விழுக்காடு மானிய விலையில் தக்கைப் பூண்டு வழங்கப்பட்டுள்ளது. இவற்றை நெல் சாகுபடிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தென்னைக்கு பயன்படுத்தக் கூடாது. தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு தனி நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. சிறுதானியம் பயிர் வகைகளுக்கு, எண்ணெய் வித்து பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.1200 வழங்கப்படுகிறது. அங்கக விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் மாதிரி பண்ணை அமைக்க ரூ.10 ஆயிரம் அரசு வழங்கி வருகிறது என்றார்.

சேதுபாவாசத்திரம் சேதுபாவாசத்திரம் வட்டாரம் குருவிக்கரம்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) சாந்தி பேசியது, சேதுபாவாசத்திரம் வட்;டாரத்தில் 725 ஏக்கர் இலக்கு பெறப்பட்டு, அதற்காக 14.5 மெ.டன் தக்கைபூண்டு விதைகள் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அவை ஏக்கருக்கு 20 கிலோ வீதம் தக்கைபூண்டு விதைகள் 50 விழுக்காடு மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது அதிக அளவில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் பயன்படுத்துவதால் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைந்து மண் வளம் குன்றியுள்ளது. மண்வளத்தை பேணிக்காப்பதில் பசுந்தாள் உரப்பயிர்களின் பங்கு முதன்மையானது" என்றார்.

நிகழ்வுகளில் திமுக பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், ஊராட்சி மன்றத் தலைவர்கள் வைரவன் (குருவிக்கரம்பை), ராம்பிரசாத் (சொக்கநாதபுரம்), ஒன்றியக்குழு உறுப்பினர் அருள்நம்பி, உதவி விதை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள், அட்மா திட்ட அலுவலர்கள் மற்றும் பயிர் அறுவடை பரிசோதனை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். துணை வேளாண்மை அலுவலர் சிவசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Tags

Next Story