முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மானியம்: மாவட்ட ஆட்சியர் தகவல்
தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி தெரிவித்துள்ளதாவது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வீட்டுக் கடன் பெற்று புதியதாக வீடு கட்டியிருந்தாலும் அல்லது கட்டிய வீடாக வாங்கினாலும் தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நல நிதியிலிருந்து ரூ.1லட்சம் மானியம் வழங்கப்படும் என்பதால் இந்த நிதியுதவியினை பெறுவதற்கு கீழ்க்காணும் நிபந்தனைகள் இருக்க வேண்டும்.
ராணுவத்தில் அளவில்தார் மற்றும் அதற்கு இணையான தகுதி உள்ளவர்கள் மட்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்று இருப்பவராக இருக்க வேண்டும். கணவர், மனைவி இருவரில் ஒருவர் பெயரில் மட்டும் வீடு இருக்க வேண்டும். கட்டிய மற்றும் வாங்கும் வீடு முதல் வீடாக இருக்க வேண்டும்.
கணவர் மனைவி இருவரும் மத்திய/மாநில பொதுத்துறை அரசு சார் நிறுவனங்களில் நிரந்தர மறு வேலைவாய்ப்பு பெற்றவராக இருத்தல் கூடாது. மேற்கூறிய அனைத்து தகுதிகளும் உள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகம், தருமபுரி அவர்களை அணுகி உரிய விண்ணப்பம் பெற்று பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் த கி.சாந்தி தெரிவித்துள்ளார்.