பட்டுப்புழு வளர்ப்புக்கு மானியம் : ஆட்சியர் தகவல்
பட்டுப்புழு வளர்ப்பு கண்காட்சி
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு பட்டு வளர்ச்சித் துறையின் சார்பில், சிறப்பு கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் துவக்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் ஆட்சியர் கூறியதாவது, தஞ்சாவூர் மாவட்டத்தில் பூதலூர், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருவோணம் ஆகிய பகுதிகளில் சுமார் 50க்கு மேற்பட்ட விவசாயிகள் பட்டு வளர்ப்புத் தொழிலை சிறப்பாக செய்து வருமானம் ஈட்டி வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு பட்டு வளர்ச்சித் துறை சார்பில் வழங்கப்படும், மல்பெரி செடி நடவு மானிய ஊக்கத் தொகையாக, ரூ.10 ஆயிரத்து 500 ம், பட்டுப்புழு வளர்ப்பு மனை மானியமாக ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மற்றும் ரூ.52 ஆயிரத்து 500 மதிப்புள்ள தளவாடப் பொருட்களை மானியமாக பெற்று, பட்டுத்தொழிலை விவசாயிகள் செய்து வருகின்றனர்.
மேலும், இத்தொழிலை தொடங்க ஆர்வமுள்ள விவசாயிகள் பட்டு வளர்ச்சித் துறை உதவி ஆய்வாளர் கைபேசி எண்ணை (6380229343) தொடர்பு கொண்டு பயன்பெறலாம்" என்றார். பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கண்காட்சியை பார்வையிட்டனர். இந்நிகழ்வில், வேளாண்மை இணை இயக்குநர் ந.க.நல்லமுத்து ராஜா, பட்டு வளர்ச்சித் துறை உதவி ஆய்வாளர் ப.தீபா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.