பண்ணை குட்டை அமைக்க மானியம்!
பண்ணை குட்டை
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலமாக நீலகிரி மாவட்டத்தில் நடப்பு 2024-25-ம் ஆண்டில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ரூ.5.45 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்க திட்டத்தில் தோட்டக்கலை பயிர் பரப்பு விரிவாக்க இனத்தின் கீழ் காய்கறிகள், எலுமிச்சை, அத்தி, அவகேடோ, ஸ்ட்ராபெரி, ஆரஞ்சு, லிட்சி, ரம்பூட்டான், மங்குஸ்தான், கிவி, மிளகு, பூண்டு, இஞ்சி போன்ற பயிர்களுக்கு 40 சதவீதம் மானியமாக ஒரு எக்டருக்கு ரூ.13 ஆயிரத்து 200 முதல் ரூ.1.12 லட்சம் வரை மதிப்பிலான விதைகள், பழ நாற்றுகள் மற்றும் இயற்கை இடுபொருட்கள் வழங்கப்படுகிறது.
பண்ணை குட்டை அமைக்க ரூ.1.50 லட்சம் மதிப்பிலான திட்டத்திற்கு 50 சதவீதம் மானியமாக ரூ.75 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. பசுமை குடில் அமைக்க 50 சதவீதம் மானியமாக சதுரமீட்டருக்கு ரூ.422 முதல் ரூ.467.5 வரை மானியம் மற்றும் நிழல் வலைக்குடில் அமைத்திட 50 சதவீத மானியமாக சதுர மீட்டருக்கு ரூ.355 வழங்கப்படுகிறது. பிளாஸ்டிக் நில போர்வைக்கு 50 சதவீத மானியமாக ரூ.16 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. பசுமை குடிலில் கார்னேசன் மலர் செடிகள் நடவு செய்ய 50 சதவீத மானியமாக சதுர மீட்டருக்கு ரூ.305 மானியம் மற்றும் பசுமை குடிலில் லில்லியம் மலர் செடிகள் வளர்க்க 50 சதவீத மானியமாக சதுர மீட்டருக்கு ரூ.213 மானியம் வழங்கப்படுகிறது.
காய்கறிகள் மற்றும் பழங்களின் விற்பனையை மேம்படுத்த 50 சதவீத மானியமாக ரூ.15 ஆயிரத்திற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை வண்டி வழங்கப்பட உள்ளது. வாழை விவசாயிகளுக்கு வாழைத்தார் உரை 50 சதவீத மானியமாக ரூ.12,500 வழங்கப்பட உள்ளது. இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒரு எக்டருக்கு ரூ.3000 முதல் ரூ.4000 வரை மதிப்பிலான இயற்கை இடுபொருட்கள் வழங்கப்படும். மேலும் மண்புழு உரம் தயாரிக்க கூடாரம் அமைக்க ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கப்படும். ரூ.16 ஆயிரம் மதிப்பிலான மண்புழு உரம் படுக்கைகள் ரூ.8000 மானியத்தில் வழங்கப்பட உள்ளது. அறுவடை பின்செய் நேர்த்தி திட்டத்தின் கீழ் காய்கறி மற்றும் கொய்மலர்களை 2-50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சேமித்து பின்னர் விற்பனை செய்ய பீரி கூலிங் யூனிட் அமைக்க ரூ.25 லட்சம் மதிப்பிலான திட்டத்திற்கு 35 சதவீத மானியமாக ரூ.8.75 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.
காய்கறிகளை சேமிக்க ரூ.4 லட்சம் நிதியில் 600 சதுர அடி பரப்பிலான சிப்பம் கட்டும் அறை அமைக்க 50 சதவீதம் மானியமாக ரூ.2 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. மேலும் காய்கறிகளை சேமிக்க குளிர் சேமிப்பு கிடங்கு அமைக்க 50 சதவீத மானியமாக ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.3500 மானியம் வழங்கப்படுகிறது. நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் 100 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு தெளிப்பு நீர்பாசன கருவிகள் வழங்கப்பட உள்ளது. புதிதாக தெளிப்பு நீர்பாசன கருவிகள் பெற விண்ணப்பிக்கும் விவசாயிகள் டீசல் அல்லது மின்மோட்டார் வாங்க விரும்பினால் அதற்கு ரூ.15 ஆயிரம் (50 சதவீதம்) பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். நுண்ணீர் பாசன திட்டத்தில் விண்ணப்பிக்கும் விவசாயிகள் பண்ணை குட்டை அமைக்க ரூ.75 ஆயிரம் (50 சதவீதம்) பின்னேற்பு மானியமாக பெற்று கொள்ளலாம்.
தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வாழை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தார் ஈன்றிய வாழைகளுக்கு முட்டுகள் அமைக்க ஒரு எக்டருக்கு ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படும். மேலும் பாகற்காய், பீன்ஸ் போன்ற பயிர்களுக்கு பந்தல் அமைக்க ஒரு எக்டருக்கு ரூ.3 லட்சம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாடித்தோட்டம் அமைக்க இடுபொருட்கள் 50 சதவீதம் மானியத்தில் ஒரு தொகுப்பிற்கு ரூ.450 மானியமாக வழங்கப்பட உள்ளது. சிறிய அளவிலான காளான் வளர்ப்பு கூடாரம் அமைக்க ரூ.50 ஆயிரம் பின்னேற்பு மானியம் வழங்கப்படும்.
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் 2024-25ம் ஆண்டு நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு பயிற்சிகள், கண்டுனர் சுற்றுலா (மாவட்ட, மாநில, வெளி மாநில அளவில்) செயல் விளக்கங்கள், விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் மற்றும் பண்ணை பள்ளி ஆகிய இனங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநரை தொடர்பு கொண்டு பெயர் பதிவு செய்து கொள்ளலாம். இந்த அனைத்து திட்டங்களிலும் பயனடைய விரும்பும் விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் (ஆதார், ரேசன் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சிட்டா, அடங்கல், அனுபோக சான்றிதழ் ஆகிய ஆவணங்களை வழங்கி பெற்று கொள்ளலாம் என தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலா மேரி தெரிவித்துள்ளார்.