கிராமசபை கூட்டத்தை ரத்து செய்யுமாறு திடீர் கோஷம்
கிராமசபை கூட்டத்தை ரத்து செய்யுமாறு திடீர் கோஷம் எழுந்ததால் மத்திகோட்டில் பரபரப்பு உண்டானது.
குமரிமாவட்டம் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, மத்திகோடு ஊராட்சியில் உள்ள மத்திகோடு அரசு மேல்நிலை பள்ளியில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் 50 நபர்களுடன் ஊராட்சி தலைவர் அல்போன்சாள் தலைமையில் தொடங்கியது. அப்போது கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் மத்திகோடு ஊராட்சியில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருவதால், விதிமுறை படி 300 மக்கள் கலந்து கொண்டால் மட்டுமே கிராம சபை கூட்டத்தை நடத்த முடியும் என்று கூறினார்கள்.
அப்போது அங்கிருந்த கிள்ளியூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சோனல்) மற்றும் ஊராட்சி தலைவர் நாங்கள் கூட்டத்தை எத்தனை நபர்கள் இருந்தாலும் நடத்துவோம் என்று தெரிவித்தனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் கூட்டத்தை தொடர்ந்து நடத்தினர். இதுபற்றி மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசிய போதும் அங்கிருந்த அதிகாரி கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. மீண்டும் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி அரசின் விதிமுறைபடி மக்கள் எண்ணிக்கை இல்லாமல் கிராம சபை கூட்டத்தை நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை எதிர்த்து மக்கள் கோஷமிட்டனர்.
மேலும் கடந்த நவம்பர் 1 ம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பொது மக்களால் கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத ஊராட்சி தலைவரை பொதுமக்கள் கண்டித்தனர இந்த கிராம சபை கூட்டத்தில் சமூக ஆர்வலர் எட்வின் ஜோஸ், ஊராட்சி துணை தலைவர் ஜெனோ, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் 80 - க்கும் கீழ் பொதுமக்கள் மற்றும் ஒரு சில அரசு துறைகளின் ஊழியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.