சேலத்தில் ஓடும் காரில் திடீரென தீ விபத்து

சேலத்தில் ஓடும் காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஒரே குடும்பத்தினர் முன்று பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அன்சர் (வயது 52). இவர் அதே பகுதியில் ஷூ கடை நடத்தி வருகிறார். அவருடைய மனைவி ராகிலா (46). இவர்களுக்கு 10 வயதில் மகன் உள்ளான். அன்சர் தனது மனைவிக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு மகனுடன் காரில் நேற்று வந்தார். ராகிலாவுக்கு அங்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து காரில் புறப்பட்டனர். இரவு 7.30 மணி அளவில் சாரதா கல்லூரி எதிரே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது காரில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அன்சர் காரை நிறுத்தினார். பின்னர் காரில் இருந்த 3 பேரும் வேகமாக கீழே இறங்கினர். அவர்கள் இறங்கிய சிறிது நேரத்துக்குள் கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. காரில் இருந்து உடனடியாக இறங்கியதால் அன்சர் மற்றும் அவரது மனைவி, மகன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சேலம் செய்வாய்பேட்டை தீயணைப்பு வீரர்கள் உதவி மாவட்ட அலுவலர் சிவகுமார் தலைமையில் அங்கு விரைந்து சென்றனர். அழகாபுரம் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சிறிது நேரம் போராடி காரில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதும் எரிந்து சேதமானது. மின்கசிவு காரணமாக காரில் தீப்பிடித்திருக்கலாம் என்று தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் ஓடும் காரில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story