சேலத்தில் நள்ளிரவில் திடீர் தீ விபத்து; 8 மோட்டார் சைக்கிள்கள் சேதம்
சேலம் மரவனேரி சலாம் காலனி குடியிருப்பில் டூவீலர்கள் நிறுத்தப்பட்ட இடத்தில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்ட நிலையில் தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
சேலம் மரவனேரி சலாம் காலனி பகுதியில் உள்ள 2 மாடி வீட்டில் 8 குடும்பங்கள் வசித்து வருகின்றன. வீட்டின் முன்பாக மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி இருந்தனர். நள்ளிரவு 12 மணி அளவில் ஒரு மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ மளமளவென எரிந்து மற்ற மோட்டார் சைக்கிள்களுக்கும் பரவியது. அந்த வகையில் 8 மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிய தொடங்கின. இதனால் அதிர்ச்சி அடைந்து வீட்டில் உள்ளவர்கள் அபய குரல் எழுப்பினர்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். தகவல் அறிந்த செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ½ மணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இந்த தீ விபத்தால் அந்த 8 மோட்டார் சைக்கிள்களும் எரிந்து சேதமானது. அஸ்தம்பட்டி போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.