அதிகாலையில் திடீரென கனமழை : உப்பு உற்பத்தி பாதிப்பு!

அதிகாலையில் திடீரென கனமழை : உப்பு உற்பத்தி பாதிப்பு!
உப்பு உற்பத்தி பாதிப்பு
தூத்துக்குடியில் அதிகாலையில் பெய்த கனமழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் உப்பள உரிமையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வெயில் கொளுத்திய நிலையில், கடந்த சில நாட்களாக கோடை மழை அவ்வப்போது பெய்து மக்களை மகிழ்வித்து வருகிறது. தூத்துக்குடியில் அதிகாலை முதல் திடீரென கனமழை பெய்தது. அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய மழை முதலில் மிதமாக பெய்தது. பின்னர் சுமார் 2 மணி நேரம் கனமழையாக பொழிந்தது.

தூத்துக்குடி மாநகர் பகுதி, முத்தையாபுரம், பழைய காயல், ஆறுமுகநேரி, முள்ளக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக சாலையோர பள்ளங்களில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக இந்த பகுதிகளில் உள்ள உப்பளங்களில் தண்ணீர் தேங்கியது. கடந்த 2 நாட்களாக அவ்வப்போது லேசான சாரல் அடித்த நிலையில் உப்பளங்களில் உப்பு உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை பெய்த கனமழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த கோடை மாதங்களில் தான் உப்பு உற்பத்தி தாராளமாக நடைபெறும். ஆனால் இந்த நேரத்தில் மழை பெய்துள்ளதால் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று பெய்துள்ள மழையின் காரணமாக அடுத்த 10 நாட்களுக்கு உப்பு உற்பத்தி பணியை மேற்கொள்ள முடியாது என உற்பத்தியாளர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

Tags

Next Story