இறந்தவரின் உடலை சாலையில் வைத்து திடீர் மறியல் போராட்டம்
சாலை மறியல்
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டு செம்மங்குடி சாலையில் சுடுகாடு அமைந்துள்ளது. இந்த சுடுகாட்டில் நகராட்சி 5 வார்டுக்கு உட்பட்ட கோவிலான் தெரு, அம்பேத்கர்நகர், திருவந்தி கட்டளை தெரு, மணல்திடல் தெரு, சரக்கான் தெரு பன்னீர்செல்வம் தெரு உள்ளிட்ட 11 பகுதிகளில் யாரேனும் இறந்தால் அவர்களை இந்த சுடுகாட்டிற்கு கொண்டு வந்து அடக்கம் செய்வது வழக்கம்.
சுடுகாட்டிற்கு செல்லும் சிமெண்ட் சாலை சிதலமடைந்து காணப்பட்டதால் சீரமைத்து தரக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில் டெண்டர் விடப்பட்டு 6 மாத காலத்திற்கு மேல் ஆகியும் பணிகள் தொடங்கப்படாத நிலையில் கோவிலான் தெருவில் வசிக்கும் சாமிதுரை என்பவரது மனைவி ஜானகியம்மாள்( 85 ) என்பவர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார் உயிரிழந்த ஜானகி அம்மாள் உடலை அடக்கம் செய்ய வாகனத்தில் வந்த போது சுடுகாடு அருகே சாலையில் இறந்தவரின் உடலை கொண்டு வந்த வாகனத்தை நிறுத்தி வைத்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி நகராட்சி ஆணையர் ஹேமலதா மற்றும் சீர்காழி காவல் ஆய்வாளர் சிவகுமார் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் புதிய சாலை அமைக்க விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர், தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர், இந்த சாலை மறியல் போராட்டத்தால் சீர்காழி திருமுல்லைவாசல் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.