பொதுமக்கள் திடீர் போராட்டம் - தேர்தலை புறக்கணிக்க முடிவு
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பள்ளந்துறையில் உள்ள யூதா ததேயு மேல்நிலைப் பள்ளியில் நான்கு வாக்குச்சாவடிகள் இயங்கி வருகிறது. இந்த வாக்கு சாவடியில் பள்ளந்துறை, அண்ணா நகர் பகுதி மக்கள் சுமார் 4 ஆயிரம் பேர் வாக்களித்து வந்தனர். தற்போது பள்ளந்துறையில் இருந்து ஒரு பூத் பிரிக்கப்பட்டு அன்னை நகரில் உள்ள இ- சேவை மையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் பள்ளந்துறையில் இருந்து 36 வாக்குகள் அன்னை நகரில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனை அறிந்த பள்ளந்துறை ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பள்ளந்துறை ஊர் மக்கள் ஆலயத்திற்கு முன்பு இன்று குவிந்தனர். தொடர்ந்து தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அன்னை நகருக்கு மாற்றப்பட்டுள்ள 36 வாக்குகளையும் பள்ளந்துறையில் ஏற்கனவே இயங்கி வரும் வாக்குச்சாவடியில மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இது தொடர்பாக போராட்டம் நடத்திய மக்கள் கூறுகையில், _ அன்னை நகரில் வாக்குச்சாவடி தொடங்கியதில் எங்களுக்கு எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. ஆனால் அந்த வாக்குச்சாவடியில் பள்ளந்துறை மக்கள் 36 பேரை சேர்த்துள்ளனர். அந்த 36 பேரையும் மீண்டும் பள்ளந்துறையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் வகையில் வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டும். தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பள்ளந்துறையில் வாக்களிக்கும் வாக்காளர்கள் அனைவரும் தேர்தல் புறக்கணிப்பை செய்வோம். என்று கூறினார்கள்.