ஆக்கிரமிப்பு கடைகளால் அவதி
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
கொரோனா ஊரடங்கின் போது, கோயம்பேடு சந்தை மூடப்பட்டு, தற்காலிகமாக திருமழிசைக்கு கடைகள் மாற்றப்பட்டன. அப்போது பல வியாபாரிகள், கோயம்பேடு - பூந்தமல்லி நெடுஞ்சாலையோரம் வாகனங்களில் காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்தனர். கொரோனா காலத்தில் அச்சாலையில் போக்குவரத்து குறைவாக இருந்ததால், பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், தற்போது அதே இடத்தில் கடைகள் அதிக அளவில் அதிகரித்துள்ளன.
இவர்களிடம் பொருட்கள் வாங்க வரும் நபர்கள், தங்களின் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை பூந்தமல்லி நெடுஞ்சாலையோரம் நிறுத்துவதால், சாலை குறுகி நெரிசல் ஏற்படுகிறது. இதனால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற, தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.