துறையூர் அருகே கரும்பு விவசாயிகள் வேதனை

துறையூர் அருகே கரும்பு விவசாயிகள் வேதனை

கரும்பு தோட்டத்தில் நிற்கும் விவசாயிகள்

துறையூர் அருகே பொங்கல் தொகுப்பிற்காக கரும்பை கொள்முதல் செய்வதாக கூறிச் சென்ற வேளாண்மை துறை அதிகாரிகள் தற்போது மறுப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

பொங்கல் பண்டிகை மற்றும் கோயில் வழிபாடுகளுக்காகவும் செங்கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. பெரும்பாலும் பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு பயன்படுத்துவதோடு, கோயில் திருவிழாக்களில் சாமிக்கு வைத்து வேண்டுதல்களை வழிபடுவதற்கும் நிறைவேற்றுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

எனவே, இதன்தேவை குறைவுதான் என்பதால் குறைந்த பரப்பில் தான் செங்கரும்பு சாகுபடி செய்யப்படும். தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பு இடம்பெற்ற பிறகு ஆண்டுதோறும் செங்கரும்பு சாகுபடி இருமடங்காக உயர்ந்தது.

நிகழாண்டும் திருச்சி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 200 ஹெக்டரில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அந்தநல்லூர், மணிகண்டம், திருவெறும்பூர், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, லால்குடி, மண்ணச்சநல்லூர், புள்ளம்பாடி, முசிறி, தொட்டியம், தா.பேட்டை, துறையூர், உப்பிலியபுரம் என 14 ஒன்றியங்களிலும் பரவலாக ஆங்காங்கே அரை ஏக்கர் என்ற வகையில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள பொன்னுசங்கம் பட்டி பகுதியில் விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தில் கரும்பு பயிரிட்டு உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்குவதற்காக இந்த பகுதியில் உள்ள விவசாயிகளிடம் 40,000 கரும்புகளை கொள்முதல் செய்வதாக துறையூர் வேளாண்மை துறை அதிகாரிகள், கரும்பை பார்வையிட்டு விலை நிர்ணயம் செய்து சென்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மகிழ்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்த கரும்பு விவசாயிகள், எப்பொழுது தங்களது கரும்பை கொள்முதல் செய்வீர்கள் என்று கேட்பதற்காக வேளாண்மை துறை அதிகாரியை தொடர்பு கொண்டு தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் விவசாயிகளின் தொடர்பை துண்டித்ததாக தெரிகிறது.

இதனால் கவலை அடைந்த விவசாயிகள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூறி தமிழக அரசு உடனடியாக தங்கள் வாழ்வாதாரத்தை காத்திட நடவடிக்கை எடுத்து தங்களது கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story