கந்துவட்டி, தீண்டாமை கொடுமையால் தற்கொலை - காத்திருப்பு போராட்டம்
காத்திருப்பு போராட்டம்
கழுகுமலையையடுத்த கரடிகுளம் சின்ன காலனியைச் சோ்ந்த மாடசாமி என்பவரின் மகன் கதிரவன் (34). தொழிலாளியான இவா், கந்துவட்டி, தீண்டாமைக் கொடுமைகளால் தற்கொலை செய்துகொண்டார் . தற்கொலைக்கு தூண்டுதல், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தின்கீழ் கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து, கழுகுமலை ஆறுமுக நகரைச் சோ்ந்த நடராஜனைக் கைது செய்தனா். இந்நிலையில், கதிரவன் குடும்பத்தினருக்கு அரசின் இழப்பீட்டுத் தொகை வழங்காததைக் கண்டிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் தரையில் அமா்ந்து காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கயத்தாறு ஒன்றியச் செயலா் சாலமன்ராஜ் தலைமை வகித்தாா். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பின் மாவட்டச் செயலா் சக்திவேல்முருகன் முன்னிலை வகித்தாா். சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினா் மோகன்தாஸ், மாவட்ட துணைத் தலைவா் தெய்வேந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த மாரீஸ்வரன், சிறுபான்மையின் மக்கள் நலக் குழு மாவட்டத் தலைவா் முருகன், கதிரவனின் மனைவி, குழந்தைகள், உறவினா்கள் பங்கேற்றனா். கோட்டாட்சியா் ஜேன் கிறிஸ்டிபாய், வட்டாட்சியா் லெனின் ஆகியோா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், முற்பகலில் தொடங்கிய போராட்டம் பிற்பகல் ஒரு மணி அளவில் முடிவுக்கு வந்தது.