ஏற்காட்டில் கோடை விழா விரைவில் தொடங்கப்படும்: மாவட்ட ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர் ஆய்வு
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 47-வது கோடை விழா விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக மேற்கொள்ளப்பட்டு உள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- ஏற்காட்டில் ஒவ்வொரு ஆண்டும் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு கோடை விழா விரைவில் தொடங்கப்படும். பள்ளி மாணவ, மாணவிகள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கோடை காலத்தை கொண்டாட ஏற்காடு மலைப்பகுதிக்கு வருகின்றனர்.
குறிப்பாக ஏற்காடு அண்ணா பூங்காவில் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் லட்சக்கணக்கான மலர்களை கொண்டு மலர் கண்காட்சி மற்றும் காய்கறி, பழக்கண்காட்சிகள் நடத்தப்படும். தினமும் கலை, இசை நிகழ்ச்சிகள், படகு போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். ஏற்காடு மலைப்பாதையில் சாலை பாதுகாப்பு குறித்து சுற்றுலா பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்காடு கோடை விழாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் சாலை விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, ஊராட்சி உதவி இயக்குனர் சங்கமித்திரை, உதவி கலெக்டர் அம்பாயிரநாதன், மாவட்ட சுற்றுலா அலுவலர் வினோத்குமார் உள்பட அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.