கோடை வெப்பம் : சிக்னல்களில் பசுமை பந்தல் - நாமக்கல் நகராட்சி நடவடிக்கை

பசுமை பந்தல் அமைத்துள்ளதன் காரணமாக சிக்னலுக்காக காத்திருக்கும் வாகன ஓட்டிகள் சிறிது நேரம் நிழலின் அருமையை அனுபவித்து செல்கின்றனர்.

தமிழகம் முழுவதும் கோடை வெயில் வதைத்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது. மதிய வேளையில் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் சிக்னல்களில் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்துக் கிடக்கின்றனர்.

தற்போது நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் படி நாமக்கல் நகரில் திருச்செங்கோடு சாலை சிக்னல் சந்திப்பு, சேலம் சாலை சிக்னல் சந்திப்பு மற்றும் மோகனூர் சாலை சிக்னல் சந்திப்புகளில் நாமக்கல் நகராட்சி சார்பில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பசுமை பந்தல் அமைத்துள்ளதன் காரணமாக சிக்னல் விழுவதால் சாலையில் நின்று செல்லும் வாகன ஓட்டிகள் சிறிது நேரம் நிழலின் அருமையை அனுபவித்து செல்கின்றனர்.

இதுகுறித்து நாமக்கல் சமூக ஆர்வலர் பசுமை மா. தில்லை சிவக்குமார் கூறுகையில், நாமக்கல் மாவட்டத்தில் வரலாறு காணாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இது போன்று பந்தல் அமைப்பது இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வெயிலின் தாக்கத்தை சிறிய அளவில் குறையும் , இதை உணர்ந்து நாம் அனைவரும் பின்வரும் காலங்களில் பசுமையைப் பாதுகாக்க மரக்கன்றுகளை நட வேண்டும்" எனக் கூறினார். வாகன ஓட்டிகளுக்காக நாமக்கல் நகராட்சி பசுமை பந்தல் அமைத்துள்ள செயல் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதோடு, மாவட்ட நிர்வாகத்தின் செயலுக்கு மக்கள் பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story