சேலத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பு - பொதுமக்கள் அவதி
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
சேலத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதேநேரத்தில் இளநீர், தர்பூசணி விற்பனை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். ஆனால் தற்போது கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே கோடை வெயிலின் தாக்கம் தொடங்கி விட்டது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 98 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவாகி வருகிறது. இதனால் பகலில் அதிகரிக்கும் வெயிலின் தாக்கத்தால் வெளியில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகிறார்கள். குறிப்பாக கடைவீதியில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. பழக்கடைகளிலும், சாலையோரம் உள்ள தற்காலிக ஜூஸ் கடைகளிலும் பழச்சாறு விற்பனை அதிகரித்துள்ளது. மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்வோர் ஆங்காங்கே சாலையோரம் உள்ள ஜூஸ் கடைகளில் பழச்சாறுகளை அருந்தி செல்வதை காணமுடிகிறது. கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் கொளுத்தும் வெயிலை சமாளிக்கும் வகையில் தங்களது சுடிதார் துப்பட்டாவை தலையில் மூடியவாறு செல்வதையும், நடந்து செல்லும் பெண்கள் குடையை பிடித்தவாறு செல்வதையும் காணமுடிகிறது. சேலத்தில் கடந்த 27-ந் தேதி 96.3 டிகிரியாக வெயிலின் அளவு பதிவாகியிருந்தது. இந்நிலையில், நேற்று 98.1 டிகிரியாக அதிகரித்துள்ளது. விரைவில் 100 டிகிரியை தொட்டுவிடும் என்பதால் சாலையில் அனல்காற்று வீசும் எனவும், அக்னி நட்சத்திர காலங்களில் உச்ச அளவாக 105 டிகிரியை தாண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, வரும் வாரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் பகலில் வெளியில் செல்வதை முடிந்தவரை பொதுமக்கள் தவிர்க்குமாறும், ஜூஸ், இளநீர், மோர், கரும்புச்சாறு போன்ற நீர் ஆகாரங்களை அதிகளவில் எடுத்துக்கொள்ளுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
Next Story