ஊட்டி மைய நூலகத்தில் கோடைக்கால பயிற்சி வகுப்பு!

ஊட்டி மைய நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.
ஊட்டியில் மாவட்ட மைய நூலகம் உள்ளது. இதன் கீழ் 54 கிளை நூலகங்கள், 29 ஊர்ப்புற நூலகங்கள், 19 பகுதி நேர நூலகங்கள் என மொத்தம் 103 நூலகங்கள் செயல்பட்டு வருகிறது. மைய நூலகத்தில் 18,500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தினசரி இங்கு நூற்றுக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். மாவட்ட நூலகத்தில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகிறவர்கள் இலவச பயிற்சி பெறவும், பழங்குடியின மக்கள் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு சிறப்பு வசதியும் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. மாவட்ட மைய நூலகத்தில் சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம் மற்றும் பொது நூலகத்துறை சார்பில் பழங்குடியினர் பண்பாடு சார்ந்த சிறப்பு நூலகம் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் மற்றும் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் சார்பில் 2024-ம் ஆண்டு மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மாவட்ட மைய நூலகத்தில் காலை 10:30 மணி முதல் 12:30 மணி வரை 3 நாட்கள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு சிறப்பு வகுப்புகளில் பங்கேற்றனர். இதில் கட்டணம் இல்லாமல் கணினி, ஓவியம், யோகா, பரதநாட்டியம் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டன. முடிவில் பயிற்சிகள் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Tags

Next Story