தஞ்சாவூர் கருணாசாமி கோயிலில் சூரிய வழிபாடு

கரந்தை கருணாசாமி கோவிலில் நடந்த சூரிய வழிபாட்டில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி படர்ந்ததும், வசிஷ்டேஸ்வரருக்கு மகா தீபாராதனை காட்டி வழிபாடு செய்யப்பட்டது.

தஞ்சாவூர் கரந்தையில் ஏறத்தாழ 1,400 ஆண்டுகள் பழைமையான கருணாசாமி கோயிலில் சூரிய வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

திருநாவுக்கரசர் பாடல் பெற்ற வைப்புத் தலமான இக்கோயிலில் மாமன்னன் ராஜராஜசோழனின் தந்தை சுந்தர சோழன் காலத்துக் கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ளன. எனவே, இக்கோயில் பெரியகோயிலுக்கு முந்தைய பழைமையான கோயில் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இக்கோயிலின் கிழக்கு பகுதியில் சூரிய புஷ்கரணி என்கிற கருணாசாமி குளம் ஐந்தரை ஏக்கர் பரப்பளவில் உள்ளது. கருங்குஷ்ட நோயால் துன்பப்பட்ட சோழ மன்னன் இக்குளத்தில் குளித்து, ஈசனின் கருணையால் அந்நோயிலிருந்து நீங்கப் பெற்றான் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி 3, 4, 5 ஆகிய தேதிகளில் சூரிய பூஜை நடைபெறுவது வழக்கம்.

இதேபோல, பங்குனி 3 ஆம் தேதியான சனிக்கிழமை வசிஷ்டேஸ்வரருக்கு மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி படர்ந்ததும், வசிஷ்டேஸ்வரருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதை சிவத் தொண்டர்கள், பக்தர்கள் வழிபட்டனர்.

Tags

Next Story