ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது
ஜவாஹிருல்லா
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல் முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பை மனிதநேய மக்கள் கட்சி மனமாற வரவேற்கிறது. தொழில்துறை நலன்களை விட நமது உள்ளூர் சமூகத்தின் ஆரோக்கியம் மற்றும் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதன் முக்கியத்துவத்தை இந்தத் தீர்ப்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
வேதாந்தாவின் தொடர்ச்சியான மற்றும் அபாயகரமான சூழல் ரீதியாற மீறல்களை உச்ச நீதிமன்றம் இத்தீர்ப்பில் ஒப்புக் கொண்டுள்ளது. இத்தீர்ப்பு தூத்துக்குடியில் மக்களின் போராட்டத்தின் வெற்றிக் குரலாக எதிரொலிக்கிறது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் இன்று வழங்கியுள்ள இந்த நுண்ணறிவுமிக்க தீர்க்கமான இந்தத் தீர்ப்பிற்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வழக்கை முன்வைத்து விடாமுயற்சியுடன் தமிழ்நாட்டின் முதலமைச்சர் செயல்பட்டுள்ளார். அவருக்கு எமது நெஞ்சார்ந்த நன்றி.
தமிழ்நாடு அரசின் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன், கோபால் சங்கரநாராயணன் ஆகியோருக்கும் தூத்துக்குடி மக்களின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் யோகேஸ்வரன் மற்றும் பூங்குழலி மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோலின் கன்சால்வஸ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்பிப்பதில் வழக்குறைஞர்களுக்கு பெரும் உதவிகளை புரிந்துள்ள மதுரை மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குனர் ஹென்றி திபேனுக்கும் எமது நன்றி.
தமிழ்நாடு அரசு சார்பில் முன்வைக்கப்பட்ட தெளிவான வாதம் உண்மையை வெளிக்கொண்டு வருவதிலும், தூத்துக்குடி மக்களின் நலன்களைப் பாதுகாப்பதிலும் முக்கிய பங்காற்றியுள்ளன. இந்தத் தீர்ப்பு, பெருநிறுவன நலன்களை விட நமது கூட்டு நலன் முதன்மை பெறுகிறது என்பதை உறுதிப்படுத்தும் ஓர் ஒளிக்கீற்றைப் பாய்ச்சியுள்ளது. இந்தத் தீர்ப்பு தூத்துக்குடியின் ஆரோக்கியமான மற்றும் நிலையான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும். சூழலை மாசுப்படுத்தும் கோராமண்டல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எச்சரிகையாக அமையும் என தெரிவித்துள்ளார்.