திருடுப்போன செல்போன்கள் ஒப்படைப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் திருட்டுப் போன 75 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்ட உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் காணாமல் போன சில செல்போன்கள் வட மாநிலங்கள் இருப்பது தெரியவந்துள்ளதையடுத்து அதனை மீட்பதற்காக காவல்துறையினரை வடமாநிலம் அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும், கடந்த ஒரு வார காலத்தில் 40 கிலோ கடத்தல் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 20 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களால் தவறவிட்ட மற்றும் திருட்டு போன செல்போன்கள் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் காணாமல் போனவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், 75 செல்போன்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் உரியவர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் கடந்த வருடம் 650 க்கும் அதிகமான செல்போன்கள் காணாமல் போனதாக சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் வந்ததன் அடிப்படையில் தொடர்ந்து 575 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 498 செல்போன்கள் இதுவரை உரியவிட ஒப்படைக்கப்பட்ட நிலையில் எஞ்சிய 75 செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. சராசரியாக 62 சதவீதம் செல்போன்கள் தற்போது வரை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இதில் சில செல்போன்கள் வட மாநிலங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. செல்போன் வைத்திருப்பவர்களை தொடர்பு கொண்டு செல்போன்களை ஒப்படைக்குமாறு கேட்டுள்ளோம், செல்போன்களை உரிய நேரத்தில் ஒப்படைக்காத பட்சத்தில் காவல்துறையை வட மாநிலத்திற்கு அனுப்பி செல்போன்களை பறிமுதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நெருங்குவதால் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தற்போது ஒரு கம்பெனி பாதுகாப்புக்காக வந்துள்ளது, அந்த கம்பெனி சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் இரு குழுக்களாக தங்கி உள்ளனர். தேர்தல் அறிவித்த பின்னர் மேலும் 5 கம்பெனிகள் பாதுகாப்பு பணிக்கு வர இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு குறித்து தீவிரமாக போலீசார் கண்காணித்து வருகின்றனர். கடந்த ஒரு வார காலத்தில் 40 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு சம்பவத்தில் தொடர்புடை 20 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து கடலோர கிராமங்களில் போதை பொருட்கள் கடத்தல் தடுப்பு குறித்து மீனவ கிராமங்களில் காவல்துறையுடன் மீனவர்கள் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. வேதாளை, மரைக்காயார்பட்டினம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் யாரும் போதை பொருள் கடத்தல் சம்பவங்களால் ஈடுபடவோ, கடத்தல்காரர்களுக்கு உதவி செய்யவோ வேண்டாம், கடத்தல் சம்பவத்தில் மீனவர்கள் ஈடுபட்டால் கடும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் எச்சரித்தார்.