கோயிலுக்கு சொந்தமான நிலம் அளவீடு செய்யும் பணி
நிலம் அளவீடு
செங்கல்பட்டு மாவட்டம்,சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் கிராமத்தில், பழமையான அஞ்சனாட்சி உடனுறை கச்சபேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் சோழ பேரரசர் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில்,புனரமைப்பு பணிகள் நடைபெற்று, வரும் 21-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.
அதற்காக, கோவில் சுற்றுச் சுவர்களுக்கு வர்ணம் பூசுதல், பந்தல் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கோவிலுக்கு சொந்தமாக திருக்கச்சூர் கிராமத்தில் நன்செய் மற்றும் புன்செய் நிலங்களை அளவீடு செய்யும் பணிகளில், நேற்று இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். முதற்கட்டமாக, கோவிலுக்கு பின்புறம் மேற்கு மாட வீதியில் உள்ள நிலத்தை அளவீடு செய்து, நான்கு பக்கங்களின் எல்லைகளிலும் கற்கள் நடப்பட்டன.