தேர்வு குறித்து தகவல் தெரிவிக்காத தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

தேர்வு குறித்து தகவல் தெரிவிக்காத தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

கோப்பு படம் 

ஊரக திறனாய்வு தேர்வு குறித்து மாணவர்களுக்கு தகவல் தெரிவிக்காத சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை பணி இடைநீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

தமிழகத்தில் கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளை ஊக்குவிப்பதற்காக ஆண்டுதோறும் ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் 9-ம் வகுப்பு படிக்கும் 50 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.1,000 வீதம் 4 ஆண்டுக்கு உதவித்தொகை வழங்கப்படும். சேலம் மாவட்டத்தில் கடந்த மாதம் நடந்த ஊரக திறனாய்வு தேர்வை 1,558 மாணவர்கள், 2,504 மாணவிகள் என மொத்தம் 4,062 பேர் எழுதினர்.

இந்த நிலையில் ஊரக திறனாய்வு தேர்வுக்காக சிறுவாச்சூர் அரசு மேல்நிலை பள்ளியை சேர்ந்த 38 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.அவர்களுக்கு தலைவாசல் அரசு மேல்நிலை பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தேர்வு நாள் அன்று சிறுவாச்சூர் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் ஒருவர் கூட தேர்வில் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சரவணகுமார் என்பவர் தேர்வு குறித்து மாணவ, மாணவிகளுக்கு தெரியப்படுத்தவில்லை. மேலும் அவர்களுக்கு ஹால் டிக்கெட்டும் வழங்கவில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து தலைமை ஆசிரியர் சரவணகுமாரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் உத்தரவிட்டார்.

Tags

Next Story