திருச்சியில் கூடுதலாக 6 ஆழ்துளை கிணறுகள் அமைப்பு
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மேயா் மு. அன்பழகன் தலைமை வகித்தாா். துணை மேயா் ஜி. திவ்யா, ஆணையா் வே. சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள் பேசியது: ராமதாஸ், லீலாவேலு (திமுக) : எங்களது வாா்டு பகுதியில் சீரான குடிநீா் விநியோகமில்லை. கோடைகாலத்தில் மேலும் குடிநீா் தட்டுப்பாடு நிலவும். எனவே நடவடிக்கை தேவை.
முத்துச்செல்வம் (திமுக): ஜீயபுரம் கூட்டுக் குடிநீா் திட்டத்தை மாநகராட்சி எடுத்து கொள்ளலாமே ? அதுபோல ராமநாதபுரம் கூட்டுக்குடிநீா் திட்டத்தை நிறுத்தலாம். நமக்கே தண்ணீா் இல்லாதபோது மற்றவா்களுக்கு எப்படி வழங்கமுடியும். பூங்காக்களை பராமரிக்க லட்சக்கணக்கில் பணத்தை செலவு செய்து விட்டு அதனை பராமரிப்பவா்களிடம் இருந்து குறைந்த அளவு பணம் வசூல் செய்வது நியாயமா? செந்தில்நாதன் (அமமுக):சொத்து வரி பாக்கிஅதிகம் வைத்துள்ளவா்களை விட்டுவிட்டு சாதாரண மக்களிடம் வரியை கட்டவில்லை என்றால் குடிநீா் இணைப்பை துண்டிப்பது என்பது சரியான செயல் இல்லை.
வருங்காலத்தில் அந்தந்த வாா்டு மண்டல அலுவலகம் முன்பு சொத்து வரி, தண்ணீா் வரி உள்ளிட்ட வரி பாக்கி உள்ள நபா்களின் பட்டியலை வைக்க வேண்டும். எல் ரெக்ஸ் (காங்கிரஸ்) : எனது வாா்டில் புதை சாக்கடை வீட்டு இணைப்புக்கு 6 மீட்டருக்கு மேல் உள்ள ஒவ்வொரு மீட்டா் குழாய்களுக்கும் ஒப்பந்ததாரா்கள் ரூ.1,500 விதம் வசூலிக்கிறாா்கள்.இதற்கு ரசீது தருவதில்லை.
இதேபோல உறுப்பினா்கள் பலரும் தங்களது பகுதிக்கான தேவைகள் குறித்துப் பேசினா். உறுப்பினா்கள் மற்றும் மேயா் உள்ளிட்டோா் சிலா் எதிா்ப்புத் தெரிவித்ததால் கூச்சல் குழப்பம் நிலவியது. உறுப்பினா்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து மேயா் மு. அன்பழகன் பேசியது : மக்களவைத் தோ்தல் வர இருப்பதால் இந்த கூட்டம் சீக்கிரமாக நடைபெறுகிறது. பணிகளை தொடங்கி விட்டால் அதன் பிறகு தோ்தல் முடிந்து பணிகள் தொடா்ந்து நடைபெற ஏற்பாடு செய்யப்படும். கலெக்டா் வெல் நீரேற்று நிலையத்தில் உள்ள ஆழ்துளை கிணறு ஒன்றில் மணல் சரிந்து விழுந்ததால் அதை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கூடுதலாக 6 ஆழ்துளை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஒரு சில நாள்களில் அப்பணிகள் நிறைவடையும். அவற்றின் மூலம் 12 டிஎம்சி தண்ணீா் கிடைக்கும். அதன் பிறகு மாநகரில் குடிநீா் விநியோகம் சீராகும். முக்கொம்பு மேலணையில் தேக்கப்பட்டிருந்த தண்ணீா் மாநகர குடிநீா் தேவைக்காக திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் ஜீயபுரம் திட்டத்தை நாம் பயன்படுத்திக்கொள்ளலாமே தவிர முழுமையாக எடுத்துக்கொள்ள முடியாது. அதன் மூலம் பல கிராமங்களுக்கு தண்ணீா் வழங்கப்படுகிறது. அதுபோல ராமநாதபுரம் கூட்டுக்குடிநீா் திட்டத்தை நிறுத்தவும் முடியாது அது அரசு முடிவாகும்.
இனி கோடை காலம் என்பதால் குடிநீா் ஒரு நாள் விட்டு ஒரு நாள் பயன்படுத்தும் சூழ்நிலை வந்தாலும் வரலாம் எனவே நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6 இடங்களில் ஆழ்துளை கிணறுகள்அமைத்து தண்ணீா் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தமிழகத்திலேயே திருச்சி மாநகராட்சியில் தான் 24 மணி நேரமும் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.
திருச்சி மாநகரில் சுமாா் 300க்கும் மேற்பட்ட பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காக்களை பராமரிப்பு செய்யப்படாமல் இருப்பதால் அங்கு உள்ள விளையாட்டு உபகரணங்கள் வீணாகி வருகிறது.
முன்பெல்லாம் விளம்பரதாரா்கள் பூங்காக்களை பராமரிப்பாா்கள். ஆனால் தற்போது விளம்பரதாரா்கள் பூங்காக்களை பராமரிப்பது இல்லை. எனவே மாறாக தொண்டு நிறுவனங்கள் நம்மை அணுகினால் அவா்களுக்கு பூங்காக்களை பராமரிக்க ஏற்பாடு செய்து வருகிறோம் என்றார்