கனமழையில் வீட்டையும் இழந்தவர்களுக்கு தாசில்தார் உதவி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள முத்தார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஒச்சம்மாள் (20) இவருக்கு கார்த்திகா தேவி (14) என்ற தங்கையும் மற்றும் கருப்பசாமி (11) பெரிய கருப்பசாமி (9) ஆகிய இரண்டு தம்பிகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக ஒச்சம்மாளின் அப்பா மற்றும் அம்மா என இரண்டு பேரும் இறந்து விட்ட சூழ்நிலையில் ஒச்சம்மாள் முத்தார் பட்டியில் தன்னுடைய தங்கை மற்றும் தம்பிகளுடன் தனியாக வசித்து வருகிறார். மேலும் ஒச்சம்மாள் தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து கொண்டே தன்னுடைய தங்கை மற்றும் தம்பியை கவனித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 18ம் தேதி விருது நகர் மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக முத்தார்பட்டியில் உள்ள ஒச்சம்மாளின் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த நிலையில் பெற்றோரையும் இழந்து தாங்கள் குடியிருந்த வீடும் மழையில் இடிந்த நிலையில் ஒச்சம்மாள் மற்றும் அவரின் தங்கை தம்பிகளுடன் மிகவும் கஷ்டப்பட்டு வந்து உள்ளார். மேலும் இதனை அறிந்த சாத்தூர் தாசில்தார் லோகநாதன் தன்னுடைய சொந்த பணத்தில் இருந்து ரூபாய் 5000 மற்றும் அரிசி மற்றும் பருப்பு வழங்கினர்.
மேலும் கன மழையால் வீட்டை இழந்த குடும்பத்தினருக்கு தமிழக அரசின் இழப்பீடு தொகை ரூபாய்8000 வழங்கினார். மேலும் மாவட்ட ஆட்சியர் மூலம் ஒச்சம்மாள் மற்றும் அவரின் தங்கை தம்பிகள் குடியிருக்க இலவச வீட்டு மனை பட்டா மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் சிறப்பு நிதிக்கும் சாத்தூர் தாசில்தார் லோகநாதன் மாவட்ட ஆட்சியர் மூலம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.