மனைவியை கொன்றவர் தற்கொலை

மனைவியை கொன்றவர் தற்கொலை

உயிரிழந்த தம்பதியர் 

திருப்பூரில் குடும்பத் தகராறில் மனைவியை கொன்றுவிட்டு தையல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 26). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தீபா (23) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

செல்வம் மனைவி மற்றும் குழந்தையுடன் திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த வெங்கமேடு, வேலன்நகரில் வசித்து வந்தார். செல்வமும், தீபாவும் அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் (பிப் - 14 )இரவு கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த செல்வம் மனைவி தீபாவை சுவரோடு சேர்த்து தள்ளியதில் தலையின் பின்பக்கம் பலத்த அடிபட்டு தீபா மயக்க நிலைக்கு சென்றார். இதையடுத்து தீபா பேச்சு, மூச்சு இன்றி இருந்ததால் அவர் இறந்து விட்டார் என்று பயந்துபோன செல்வம் அதே அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் அவருடைய வீட்டில் சத்தமில்லாமல் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக வீட்டின் உள்ளே எட்டிப் பார்த்தனர். அங்கு செல்வம் தூக்கில் தொங்கிய நிலையிலும், தீபா கீழே படுத்த நிலையிலும் இருந்தனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு விரைந்து சென்ற போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தீபாவை திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை செய்து கொண்ட செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருப்பூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீபா நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த அனுப்பர்பாளையம் போலீசார், தீபா இறப்பை கொலை வழக்காகவும், செல்வத்தின் இறப்பை தற்கொலை வழக்காகவும் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூரில் குடும்பத் தகராறில் மனைவியை தாக்கியதில் அவர் இறந்து விட்டதாக நினைத்து கணவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், மனைவியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story