செந்தண்ணீர்புரம் மாநகராட்சி பள்ளியில் தமிழ்க் கூடல் நிகழ்வு

செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தமிழ்க் கூடல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் கி.சதீஷ் குமார் பங்கேற்றார். பள்ளியின் தலைமை ஆசிரியர் எழிலரசி தலைமையில் மாணவர்கள் கவிதை, பேச்சு, நாடகம், வில்லுப்பாட்டு ஆகியவற்றை நிகழ்த்திக் காட்டினர்.

தொடர்ந்து பேராசிரியர் தனது சிறப்புரையில் : 6000 ற்கும் மேற்பட்ட உலக மொழிகளில் 15 தகுதிகள் கொண்ட செவ்வியல் மொழி தமிழ் மொழியாகும். இன்று மக்களின் பேச்சு மொழியாக இலக்கண இலக்கிய வளமுடன் நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப தன்னைத் தகவமைத்துக் கொண்டு வளமையுடன் திகழும் மொழி தமிழ். பண்ணிசைத்துப் பாடுவது, ஆடுவது, பாடல் இயற்றுவது தமிழரின் மரபணுவில் இயற்கையாக உள்ளது. தமிழர் பண்பாட்டில் வாழ்வியலில் இசையும் நாடகமும் இரண்டறக் கலந்ததுள்ளது.

ரசனை மிக்க ரசிகர்களே ஆகச்சிறந்த கலைஞர்கள். கலைகளாலும் கலைஞர்களாலும் தான் சமூகம் பண்பட்டு இயங்குகிறது. பேரிடர் காலங்களிலும் திசை மாறும்போதும் மக்களை சரியான திசையில் வழிநடத்தி இயக்குவது கலைகள்தான். அத்தகைய கலைகளை தன்னகத்தே கொண்டுள்ள தமிழ் மொழியைக் கற்று மாணவர்கள் வல்லமை பெற வேண்டும். தாய்மொழியில் வல்லமை பெற்றால் மட்டுமே ஆளுமை பண்பும் தலைமைப் பண்பும் ஒருவனுக்கு சிறப்பாக அமையும். எனவே தாய்மொழியில் தேர்ச்சிப் பெற்று சிறந்த நெறியுள்ள மாணவர்களாக உயரவேண்டும் என்றார். தொடர்ந்து கலைத் திருவிழாவில் மாவட்ட அளவில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தமிழாசிரியை விக்டோரியா கலை நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார். ஆசிரியர்கள் நர்மதா, ரீனா, ராணி, மோசராணி, மரினா, சந்திராதேவி, ஜெயந்தி மற்றும் பயிற்சி ஆசிரியர்கள் மாணவ , மாணவிகள் கலந்துக் கொண்டார்கள்

Tags

Next Story