தமிழக நிதிநிலை அறிக்கை: வணிகர்கள் ஆதங்கம்
வியாபாரிகள் சங்க தலைவர்
தமிழக அரசின் 2024-2025-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை! வணிகர்களுக்கான முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை! ! இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சாலை கட்டமைப்பு, ஏரி, குளங்கள் சீரமைப்பு, காவிரி, தாமிரபரணி, நொய்யலாறு, ஆற்றோர கரை பகுதிகளுக்கான வளர்ச்சித் திட்டங்கள்,
கல்விக்கடன் உயர்வு, சென்னை கிளாம்பாக்கம் வரையிலான புதிய மெட்ரோ திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, தாயுமானவர் வறுமை ஒழிப்புத் திட்டம், அடித்தட்டு ஏழைகளுக்கு 3 லட்சம் கான்கிரீட் வீடுகள், தமிழகத்தில் முதன்முறையைாக உலக புத்தொழில் மாநாடு போன்ற பல திட்டங்கள் வளர்ச்சிக்கான திட்டங்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தின் பொதுவான இவ்வளர்ச்சித் திட்டங்களுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தனது மனமார்ந்த நன்றியையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கின்றது.
அதே நேரத்தில் அரசின் அச்சாணியாய், வரி வருவாய் வசூலித்து, அரசுக்கு செலுத்தும் ஊதியமற்ற வணிகர்களுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அரசு ஊழியர்களுக்கு இணையான காப்பீட்டுத் திட்டங்கள், குடும்பநல நிதித் திட்டங்கள், பெருவெள்ள பேரிடர் இழப்பு திட்டங்கள், வணிகர்கள் செலுத்துகின்ற வரியின் அடிப்படையில் ஓய்வூதியம், அனைத்திற்கும் மேலாக சமூக விரோதிகளிடமிருந்து தங்களின் வணிகத்தையும், வாழ்வையும் பாதுகாத்துக்கொள்ள சிறப்பு பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை, தமிழக அரசுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு முன்வைத்திருக்கின்றது.
சாமான்ய சாலையோர சிறு வணிகர்களில் இருந்து உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், பெரு வணிகர்கள் வரை அனைவருக்குமான வாழ்வாதாரத்தை உறுதி செய்கின்ற பேரமைப்பின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, மக்களின் அரசை வழிநடத்திச் செல்லும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கனிவுடன் பரிசீலித்து, நிச்சயம் நல்லதொரு தீர்வினை காண வேண்டுமென தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.