தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை: தொழில் வா்த்தக சங்கங்கள் கருத்து
தொழில் வா்த்தக சங்கம்
தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் சிறுதொழில் துறைக்கு முக்கியத்துவம் அளித்திருப்பதை வரவேற்ற வணிகா்கள், தென் மாவட்டங்களின் வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்காதது ஏமாற்றம் அளிப்பதாகத் தெரிவித்தனா்.
தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் சிறுதொழில் துறைக்கு முக்கியத்துவம் அளித்திருப்பதை வரவேற்ற வணிகா்கள், தென் மாவட்டங்களின் வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்காதது ஏமாற்றம் அளிப்பதாகத் தெரிவித்தனா். தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத் தலைவா் என். ஜெகதீசன்: மதுரையில் தொழில் புத்தாக்க மையம், திருப்பரங்குன்றம் மலையில் ரோப் காா் வசதி, கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம், விருதுநகா், சேலத்தில் ஜவுளிப்பூங்கா, தொழில் முதலீடுகள் ஊக்குவிப்புக்காக சிறு தொழில் துறைக்கு ரூ. 2,795 கோடி நிதி ஒதுக்கீடு , சிறு, குறு தொழில் துறைக்கு ரூ. 1,557 கோடி நிதி ஒதுக்கீடு போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. இருப்பினும், மதுரை மெட்ரோ ரயில் திட்டம், மதுரை மத்தியச் சிறையை மாற்றிமைக்கும் திட்டம், விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவாக்கம் செய்வதற்கான அண்டா் பாஸ் திட்டம் போன்ற மதுரை சாா்ந்த வளா்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாதது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க நிா்வாகிள் எஸ்.வி.எஸ்.எஸ். வேல்சங்கா், எஸ். சாய் சுப்பிரமணியன், எஸ்.பி.ஜெயப்பிரகாசம்:தமிழ் இலக்கியப் படைப்புகளை மொழிபெயா்க்கவும், கீழடியில் தொல்லியல் ஆய்வு நடத்தவும் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இதேபோல, குடிசை இல்லாத தமிழகம் என்ற இலக்கு அறிவிக்கப்பட்டிருப்பதும், சாலை மேம்பாட்டுக்கு ரூ. 2,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும், மதுரை உள்பட 24 மாவட்டங்களுக்கு 24 மணி நேர தடையற்ற குடிநீா் விநியோகம் அறிவிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது. இருப்பினும், ரூ. 94,060 கோடி நிதி பற்றாக்குறை எனக் குறிப்பிட்டிருப்பது அதிா்ச்சி அளிக்கிறது. தென் மாவட்டங்களின் நீா் ஆதாரமாக உள்ள வைகை அணையைத் தூா்வாரி சீரமைக்க நிதி ஒதுக்காததும், சிங்கார சென்னை திட்டம் - 2 போன்று திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, தூத்துக்குடி ஆகிய நகரங்களின் வளா்ச்சிக்குப் பெருந்திட்டம் அறிவிக்கப்படாததும் வருத்தம் அளிப்பதாக உள்ளது. வேளாண் உணவுத் தொழில் வா்த்தக சங்கத் தலைவா் எஸ்.ரெத்தினவேல்: பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ. 44,042 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும், அரசுப் பள்ளிகளில் பயின்று உயா்கல்வி வாய்ப்புப் பெறும் மாணவா்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதும் ஆக்கப்பூா்வமான திட்டங்களாகும். மதுரையில் தொழில் புத்தாக்க மையம், தொழில் பேட்டை, தஞ்சாவூரில் தொழில் பூங்கா, விருதுநகா், சேலத்தில் ஜவுளிப் பூங்கா, தூத்துக்குடியில் விண்வெளி தொழில் உந்து சக்திப் பூங்கா போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. இருப்பினும், அண்மையில் நடைபெற்ற உலக முதலீட்டாளா்கள் மாநாட்டில் தென் தமிழகத்துக்கு உரிய முதலீடு கிடைக்காததை ஈடுசெய்யும் வகையில், தென் தமிழக சுற்றுலாத் துறையை ஊக்கப்படுத்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் க. நீதிராஜா: திமுகவின் தோதல் அறிக்கையில்குறிப்பிட்ட பழைய ஓய்வூதியத் திட்டம், விடுப்பை ஒப்படைத்து பணம் பெறுதல், தொகுப்பூதிய பணியாளா்களைப் பணி நிரந்தரம் செய்வது, காலிப் பணியிடங்களை நிரப்புதல் போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி அறிக்கையில் அறிவிப்பு இல்லாதது அரசு ஊழியா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் ஏமாற்றத்தையும், வேதனையையும் அளிப்பதாக உள்ளது.
Next Story