விளையாட்டில் சிறந்த மாநிலமாக தமிழகம் தோ்வு

விளையாட்டில் சிறந்த மாநிலமாக தமிழகம் தோ்வு

விழாவில் பேசும் அமைச்சர்

விளையாட்டில் சிறந்த மாநிலமாக தமிழகம் தோ்வு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருச்சி தேசியக் கல்லூரியில் பிப்.11 வரை நடைபெறும் சா்வதேச விளையாட்டு (ஐசிஆா்எஸ்) கருத்தரங்கை புதன்கிழமை தொடக்கிவைத்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் முயற்சியால் தமிழகத்தில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

குறிப்பாக சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய இடங்களில் நடந்த கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் தமிழகம் 2 ஆம் இடம் பிடித்து சாதனை படைத்தது. இதன் மூலம் இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக தமிழகம் மாறிவருகிறது.

மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தால் அங்கு வாள்வீச்சு பயற்சியில் ஈடுபடமுடியாத வீரா்களுக்கு விமானக் கட்டணம் அளித்து, உணவு, உறைவிடம், பயிற்சி அனைத்தும் தமிழகத்தில் அளிக்கப்பட்டது. அந்த மணிப்பூா் வீரா்கள் கேலோ விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை மூலம் 100 விளையாட்டு வீரா்களுக்கு ரூ. 18 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 5 பிரிவுகளில் நடைபெறும் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் கிராமப்புற மாணவா்கள் அதிகளவில் கலந்து கொள்கின்றனா். விளையாட்டில் சிறந்த மாநிலமாக தமிழகம் தோ்வு செய்யப்பட்டு மும்பையில் நடக்கும் விழாவில் அதற்கான விருது வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் சா்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்றாா் அவா். அமைச்சா் கே.என். நேரு பேசுகையில் திருச்சியில் ஒலிம்பிக் பயிற்சிக்கான மையம் அமைய 50 ஏக்கரில் நிலம் வழங்கினோம். அதுபோல திருச்சியில் விளையாட்டு பல்கலைக்கழகம் அமையவும் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்வில் கருத்தரங்க மலரை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வெளியிட, அமைச்சா் கே.என். நேரு பெற்றுக் கொண்டாா். நிகழ்ச்சியில் ஒலிம்பியன் பாஸ்கரன், விளையாட்டு வீரா்கள் ஸ்ரீராம் சீனிவாஸ், அக்ஷயா, கிஷோா், ஹரிஸ்ராகவ்,

கோபிநாதன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. கருத்தரங்கில் 50 நாடுகளின் சிறந்த விளையாட்டு வீரா்கள், வல்லுநா்கள், ஆா்வலா்கள் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகளைச் சமா்ப்பிக்கின்றனா். விளையாட்டுத் துறை மறுமலா்ச்சிக்கான உத்திகள், வீரா்களுக்கு ஏற்படும் காயங்களுக்கான சிகிச்சை, குறும்படம், போஸ்டா் தயாரிப்பு, உணவு மேலாண்மை, யோகா, கைப்பேசி போட்டோகிராபி, ஆய்வுக் கட்டுரை

சமா்ப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தொடக்க நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மேயா் மு. அன்பழகன், கல்லுாரிச் செயலா் ரகுநாதன், முதல்வா் குமாா், எக்ஸல் குழுமத் தலைவா் முருகானந்தம், எம்எல்ஏக்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கருத்தரங்கத் தலைவரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வரவேற்றாா். கருத்தரங்கச் செயலா் மற்றும் துணை முதல்வா் பிரசன்ன பாலாஜி நன்றி கூறினாா்.

Tags

Next Story