திருச்செங்கோட்டில் சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழுவினர் ஆய்வு
ஆய்வு செய்த அதிகாரிகள்
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் நகரப் பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை புதிய கட்டிட பணி, நகர காவல் நிலையம், ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
முன்னதாக திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு பின்னர் சாமி தரிசனம் செய்தனர். பண்ருட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வேல்முருகன் தலைமையில் சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பழனியாண்டி, நாமக்கல் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமலிங்கம், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், உள்ளிட்ட பலரும் அடங்கிய அரசு உறுதிமொழி குழுவினர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.
இவர்களுடன் சட்டமன்ற பேரவை முதன்மைச் செயலாளர்கள் முனைவர் சீனிவாசன், இணை செயலாளர் கருணாநிதி, துணைச் செயலாளர்ரவி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன்,நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் மண்டல நகர அமைப்பு திட்ட குழு உறுப்பினர் நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், துணைக் கண்காணிப்பாளர் இமயவரம்பன், திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, நகராட்சி ஆணையாளர் சேகர், முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன், மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு, திருச்செங்கோடு நகர்மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன், மற்றும் திருச்செங்கோடு நகர் மன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள்உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
திருச்செங்கோடு நகர பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்ட வேல்முருகன் காலாவதியான குளிர்பானங்கள் விற்கப்படுகிறதா பாதுகாப்பாக உணவு பண்டங்கள் வைக்கப் பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதே போல் பேருந்து நிலைய வளாகத்தில் இருந்த சிறுநீரக கழிப்பிடத்தை ஆய்வு செய்து, தண்ணீர் வருகிறதா? சுத்தமாக வைக்கப் பட்டுள்ளதா? என பார்வையிட்டார்.