அதிமுகவினர் மீது தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் தாக்குதல்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தென்காசி நாடாளுமன்ற தனி தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமியை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்க முன்னாள் அமைச்சர் கே.டி,ராஜேந்திரபாலாஜி,அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் தலைமையில் வத்திராயிருப்பு ஒன்றிய பகுதிகளில் 21 இடங்களில் வாக்குகள் சேகரிக்க சென்றார். சென்ற இடங்கள் எல்லாம் அதிமுக, தேமுதிக,புதிய தமிழகம், எஸ்டிபிஐ மற்றும் கூட்டணி கட்சிகள் தொண்டர்கள் பொதுமக்கள் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில் கோட்டையூர் பகுதிக்கு வாக்குகள் சேகரிக்க அதிமுக பிரச்சார வாகனங்கள் ஊருக்குள் சென்றது.இந்நிலையில் கோட்டையூர் விலக்கு அருகே தென்காசி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான் பாண்டியன் ஆதரவாளர்கள் அதிமுக பிரச்சார வாகனங்களை தொடர்ந்து சென்ற வாகனங்களை மறித்து ஊருக்குள் செல்லக்கூடாது என்று அதிமுகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் திடீரென அதிமுக தொண்டர்களை தமிழக மக்கள் முன்னேற்ற கழக ஆதரவாளர்கள் தகாத வார்த்தைகளில் பேசி தாக்கத் தொடங்கினர்.
பின்னர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் விரைந்து வந்து அதிமுக தொண்டர்களை தமிழக மக்கள் முன்னேற்றக் கழக ஆதரவாளர்கள் இடம் இருந்து காப்பாற்றி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் கோட்டையூர் விலக்கு பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. அதிமுக தொண்டர்களை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.