தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் குழு ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோஜாக் சார்பில் ஜூன் 28ஆம் தேதி மாலை 6 மணி அளவில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் சந்திரசேகர், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் செல்வராஜ், தமிழக ஆரம்ப ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அருள்ஜோதி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்அமைப்பாளர் சின்னசாமி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொருளாளர் புகழேந்தி, ஆகியோர் முன்னிலை வகித்த ஆர்ப்பாட்டத்தில், தொடர்ந்து ஆசிரியர்களை தமிழ்நாடு அரசுக்கு எதிராக தூண்டும் வகையிலே கல்வித்துறை உயர் அலுவலர்களின் செயல்பாடுகள் உள்ளதை கண்டித்தும் தொடக்க கல்வித்துறையில் 5000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ள நிலையில் தொடக்க கல்வித்துறையில் பதவி உயர்வுகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில் பதவி உயர்வு அளிக்க இயலாத நிலையிலும் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு இறுதி தீர்ப்பு வரும் வரை பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவதை நிறுத்தாமல் நடத்த துடிக்கும் தொடக்க கல்வித் துறையை கண்டித்தும், அறிவிக்கப்பட்ட பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணையினை மாற்றி அமைத்து ஒன்றிய அளவில் மட்டும் கலந்தாய்வு நடத்திட வேண்டும் எனவும், 12.10.2023 அன்று சென்னை டிட்டோஜாக் பேரமைப்பின் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்களுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் தலைமையில் பள்ளி கல்வி இயக்குனர், தொடக்க கல்வியை இயக்குனர், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகள் தொடர்பாக விரைவில் ஆணை பிறப்பிக்க வலியுறுத்தியும், கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இறுதியாக கூட்டமைப்பு தமிழக ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட தலைமை நிலைய செயலாளர் துரைராஜ், நன்றி உரை ஆற்றினார்.