கனிமொழி எம்.பி.யை வெற்றி பெறச் செய்ய வேண்டும் : அமைச்சர் பேச்சு
கூட்டத்தில் பேசும் அமைச்சர்
தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி.யை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.
தூத்துக்குடி மாநகர தி.மு.க சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் சிதம்பரநகர் பஸ்நிறுத்தம் அருகில் நடந்தது. கூட்டத்துக்கு மாநகரச் செயலர் ஆனந்தசேகரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும்,
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, தி.மு.க. அரசின் முயற்சியால் சட்டப் போராட்டத்தின் மூலம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் நமது உரிமைகளை இழந்ததால் பல்வேறு பாதிப்புகளை நாம் சந்தித்து வருகிறோம். அதிலும் குறிப்பாக நீட் தேர்வு, புதிய கல்வி கொள்கை, உதய்மின் திட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம் எல்லாவற்றையும் ஆதரித்து விட்டு தற்போது எதுவும் தெரியாததுபோல அ.தி.மு.க.வினர் வேஷம் போடுகின்றனர்.
தி.மு.க அனைத்து தரப்பினருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை வழங்குவது என சாதி, மத வேறுபாடின்றி எல்லோருக்கும் எல்லாம் என்ற கோட்பாட்டோடு செயல்பட்டு வருகிறது. தமிழகத்துக்காக கனிமொழி எம்.பி. நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்புகிறார். அவர், தூத்துக்குடியில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பின்போது, மக்களுடைய எதிர்பார்ப்புக்கு மேல் சிறப்பாக செயல்பட்டார்.
அவரை அதிகமான வாக்கு வித்தியாசத்தில் நாம் வெற்றி பெறச் செய்ய வேண்டும். பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும். இவ்வாறு அவர் பேசினார்.