தமிழ் புத்தாண்டு : டெல்டா மாவட்டங்களில் "நல்லேர் பூட்டும்" விழா

பேராவூரணி அருகே தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நல்லேர் பூட்டும் நிகழ்வு நடைபெற்றது.

விவசாயப் பணிகளை தொடங்க ஒவ்வொரு விவசாயியும் நல்ல நாள், நேரம் பார்த்து சாகுபடி பணிகளை தொடங்குவார்கள். அதே போல் தமிழர்களின் தமிழ்மாத ஆண்டு துவக்கத்தின் போது, நல்ல நாள் பார்த்து ஏர் பூட்டிய பின்னர் தான், வயலில் அந்த ஆண்டுக்கான சாகுபடியை துவங்குவது டெல்டா மாவட்டங்களில் உள்ள ஒரு வழக்கமாகும். இந்த நிகழ்வை "நல்லேர் பூட்டும்" விழாவாக இன்றளவும் டெல்டா மாவட்டங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதனை சில பகுதிகளில் பொன்னேர் பூட்டும் விழா என்றும் அழைப்பர். அதன்படி, தமிழ் புத்தாண்டு தினமான ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூர் மாவட்டத்தில் வேங்கராயன்குடிக்காடு, பள்ளியக்ரஹாரம், பேராவூரணி அருகே மாவடுகுறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் நல்லேர் பூட்டி, நிகழாண்டு சாகுபடியில் அதிக மகசூலும், எவ்வித இடையூறும் இருக்ககூடாது என பிரார்த்தித்தனர். முன்னதாக மாடுகளை குளிப்பாட்டி, நல்லேர் பூட்ட வயலில் இயற்கை உரம், நவதானிய விதைகளை தூவி, வெல்லம் கலந்த பச்சரிசியை கொண்டு சூரிய பகவானுக்கு பூ, பழம், தேங்காய் ஆகியவற்றை படையலிட்டு உழவு மாடுகளை கொண்டு பாரம்பரிய முறைப்படி ஏர் பூட்டினர்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே மாவடுகுறிச்சியில் நடைபெற்ற நல்லேர் பூட்டும் நிகழ்ச்சியில், குமரப்பா பள்ளி தாளாளர் முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு பழம், தேங்காய், வெற்றிலை, சர்க்கரை கலந்த பச்சரிசி, காணிக்கை பணம் ஆகியவற்றை வழங்கினார். தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி கையளவு விதைநெல் வழங்கப்பட்டது. இதனை விவசாயிகள் பெற்றுக் கொண்டனர். இதில் இருபதுக்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் ஏரில் பூட்டப்பட்டது. நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர். இந்த நல்லேர் பூட்டும் நிகழ்வுகள் டெல்டா மாவட்டங்களில் நேற்று தொடங்கி சித்திரை மாதத்தில் சுப தினங்களில் ஒவ்வொரு கிராமங்களில் நடைபெறவுள்ளது.

Tags

Next Story