தமிழ் பல்கலைக்கழகம் - அமெரிக்க கேரோலைனா தமிழ் கலைக்கூடம் ஒப்பந்தம்!
புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழக அரசின் நிதி நல்கையில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்ப் பண்பாட்டு மையம் அமெரிக்காவில் உள்ள கேரோலைனா தமிழ் கலைக்கூடத்துடன் தர வகுப்புகள் மற்றும் சான்றிதழ், பட்டய வகுப்புகள் நடத்துவதற்குரிய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
கேரோலைனா தமிழ் கலைக்கூடம் 2019 ஆம் ஆண்டு அமெரிக்காவின் வட கேரோலைனா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற தன்னார்வ அமைப்பாகும். அடுத்த தலைமுறை குழந்தைகள் மற்றும் சமூகத்திற்கு தமிழ் கலை மற்றும் கலாச்சாரத்தை கற்று அனுபவிக்க வாய்ப்புகளை வழங்குவது இம்மையத்தின் நோக்கமாகும்.
கேரோலைனா தமிழ் கலைக்கூடம் தற்காப்பு கலைகள், சிலம்பம் மற்றும் பழங்கால இசை கருவியான பறை ஆகியவற்றை கற்பித்து ஊக்குவிக்கிறது. உள்ளூர் சமூகத்தின் நலனுக்காக தமிழ் கலை மற்றும் இலக்கியங்களை ஊக்குவித்து வருகிறார்கள். இவ்வகையில் தமிழ்ப் பல்கலைக்கழக தமிழ்ப் பண்பாட்டு மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தின் பொழுது தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளுவன் கூறுகையில், கேரோலைனா தமிழ் கலைக்கூடம் தமிழிசையையும், தமிழ் நாட்டிய மரபினையும் மற்றும் தமிழர் கலைகளையும் கற்பிக்கும் தேவைகளை அறிந்து, அவற்றை நிறைவேற்றும் வண்ணமாகத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக தமிழ்ப் பண்பாட்டு மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்துள்ளது.
இவ்வொப்பந்ததின் மூலம் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் வாயிலாக நடத்தப்பெறும் குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், நாட்டுப்புறக்கலைகள், சிலம்பாட்டம் ஆகிய பாடப்பிரிவுகள் கேரோலைனா தமிழ் கலைக்கூடம் வாயிலாக நடத்தப்பெற்று தமிழ்ப் பல்கலைக்கழகம் வழித் தேர்வுகள் நடத்தவும் சான்றிதழ் வழங்கவும் வகை செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.
தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளுவன், தமிழ்ப்பல்கலைக்கழக பதிவாளர் (பொ) முனைவர் சி.தியாகராஜன், கேரோலைனா தமிழ் கலைக்கூட பொறுப்பாளர் தஞ்சை கோ.கண்ணன் ஆகியோர் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பரிமாற்றிக்கொண்டனர். இந்நிகழ்வில் தமிழ்ப்பண்பாட்டு மைய இயக்குநர் முனைவர் செ.கற்பகம், நிதி அலுவலர் மற்றும் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.