தமிழக ஏரி, ஆற்றுப்பாசன விவசாயிகள் ஜூன் 8ல் சென்னையில் உண்ணாவிரதம்
திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மண்டல செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் பூ. விசுவநாதன் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா்கள் ஜெ. பரமசிவம், ம. செல்லப்பிள்ளை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் திருச்சி, பெரம்பலூா், அரியலூா், சேலம், தஞ்சாவூா், கரூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த சங்க நிா்வாகிகள், விவசாயிகள் பங்கேற்று ஆலோசனை நடத்தினா்.
கூட்டத்தில் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக தமிழகத்தில் உள்ள பொதுப்பணித் துறை, உள்ளாட்சி நிா்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து ஏரி, குளங்கள், பாசனக் கால்வாய்கள், கிளைக் கால்வாய்கள், தடுப்பணைகளை முழுமையாகத் தூா்வாரி புனரமைக்க வேண்டும். மக்காச்சோளப் பயிருக்கு வறட்சி நிவாரணம் விடுபட்ட விவசாயிகளுக்கு விரைந்து நிவாரணம் வழங்க வேண்டும். கொள்ளிடத்தின் குறுக்கே அரியலூா், தஞ்சாவூா் மாவட்டங்களை இணைக்கும் வகையில் கதவணையுடன் கூடிய தடுப்பணை அமைக்க வேண்டும். இலவச விவசாய மின் இணைப்புகளை காலதாமதமின்றி விரைந்து வழங்க வேண்டும். கரூா் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட வெற்றிலை கொடிக்கால் விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
நெடுஞ்சாலைத் துறை, தேசிய நெடுஞ்சாலைத் துறை பணிகள் காரணமாக வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக மரக்கன்றுகளை நடுவதுடன், அவற்றைப் பராமரிக்கவும் வேண்டும். மழைக் காலத்துக்கு முன்பே தாா்ச்சாலைப் பணிகளை முடித்திட வேண்டும். மேக்கேதாட்டுவில் கா்நாடகம் அணை கட்டுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். காவிரியில் தமிழகத்துக்கான தண்ணீரை திறந்துவிட வேண்டும். இந்த விவகாரத்தில் கா்நாடக அரசின் செயல்பாடுகளைக் கண்டித்தும், தண்ணீரை பெற்றுத் தர தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஜூன் 8ஆம் தேதி சங்கத்தின் சாா்பில், தமிழக விவசாயிகள் முன்னேற்றக் கட்சியுடன் இணைந்து சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன