டாஸ்மாக் கடையில் கையாடல் - 2 பேருக்கு 3 ஆண்டு சிறை
நீதிமன்றம்
டேனிஸ்பேட்டை டாஸ்மாக் கடையில் ரூ.8.79 லட்சம் கையாடல் செய்து கைதான மேற்பார்வையாளர், விற்பனையாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சேலம் மாவட்டம் டேனிஸ்பேட்டை டாஸ்மாக் கடையில் கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் மேட்டுப்பட்டியை சேர்ந்த பிரகாசம் ( 37), மேற்பார்வையாளராகவும், ஓமலூர் வ.உ.சி. நகரை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் விற்பனையாளராகவும் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் இருவரும் பணியில் இருந்தபோது, அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.8 லட்சத்து 79 ஆயிரத்து 175-ஐ கையாடல் செய்துவிட்டதாகவும், அதுபற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு கூறி அப்போதைய டாஸ்மாக் மேலாளர் (பொறுப்பு) சிலம்பரசன் என்பவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து பிரகாசம், சண்முகசுந்தரத்தை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் 6-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. அதில், டாஸ்மாக் நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய பணத்தை கையாடல் செய்த பிரகாசம், சண்முகசுந்தரம் ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு கமலகண்ணன் தீர்ப்பு கூறினார்.
Next Story