போலி ஆவணங்கள் மூலம் இலங்கை தமிழர்களுக்கு பாஸ்போர்ட் - தலைமறைவான தலைமை காவலர் கைது
போலி பாஸ்போர்ட் விற்பனை செய்த காவலர் கைது
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் இலங்கை தமிழர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்று விநியோகம் செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் க்யூ பிராஞ்ச் போலீஸ் டி.எஸ்.பி. சிவசங்கரன், இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் விசாரணையில் இறங்கினர்.
அதில், இலங்கை தமிழர்களுக்கு போலியாக ஆவணங்கள் தயாரித்து அதை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தும், உரிய காவல்துறை விசாரணை ஏதும் நடத்தாமல், அதற்கு ஒப்புதல் வழங்கியும், பாஸ்போர்ட் அலுவலகத்தில் உள்ள சிலரின் துணையோடு இந்திய அரசின் பாஸ்போர்ட் வழங்கியது தெரியவந்தது. இது தொடர்பாக நடத்திய விசாரணையில், குறிப்பிட்ட காவல்நிலைய காவலர்கள் முறையாக விசாரணை நடத்தாமல் செயல்பட்டது தெரிந்தது.
மேலும், குற்றத்திற்கு உடந்தையாக சேதுபாவாசத்திரம் அருகேயுள்ள ஆண்டிக்காடு கிராம அஞ்சலக ஊழியராக பணியாற்றிய கோவிந்தராஜ், கும்பகோணத்தை சேர்ந்த வடிவேல், ராஜூ, சேதுபாவாசத்திரம் காவல்நிலையத்தில் தற்காலிக கம்யூட்டர் ஆபரேட்டராக இருந்த பாலசிங்கம், திருச்சி கல்கண்டார்கோட்டையைச் சேர்ந்த வைத்தியநாதன், ராஜமடத்தை சேர்ந்த சங்கர் ஆகிய ஆறு பேரை கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி க்யூ பிராஞ்ச் காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த 31-ஆம் தேதி கும்பகோணம் பம்படையூரை சேர்ந்த சங்கரன் என்பரை கைது செய்தனர்.
இருப்பினும் இவ்வழக்கில் முக்கிய நபரான சேதுபாவாசத்திரம் காவல்நிலைய எழுத்தருமான சேஷா, சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்படாமல் இருந்தார். இவ்வழக்கு உயர்நீதி மன்ற மதுரை கிளையில் நீதிபதி விசாரணையின் போது, போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்ற விவகாரத்தில் முக்கிய நபரும், உடந்தை இருந்தது சேஷா தான் என்பதால் அவரை ஏன் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பினர்.
இதற்கிடையே சேஷா தலைமறைவான நிலையில் அவரை க்யூ பிராஞ்ச் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில், இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற காவல்துறையினர் சேஷாவை கைது செய்தனர்.