தஞ்சையில் பழவியாபாரி படுகொலை : 3 பேர் கைது

தஞ்சையில் பழவியாபாரி படுகொலை : 3 பேர் கைது

பைல் படம் 

தஞ்சாவூரில் தொழில் போட்டியால் கூலிப்படையை ஏவி பழ வியாபாரியை கொன்ற வழக்கில் சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் அப்பு (எ) ஹரிஹரன் (26). இவர் நீடாமங்கலத்தில் பழக்கடை நடத்தி வந்தார். கடந்த 28 ஆம் தேதி வினோத், ராஜமுருகன் ஆகியோருடன் லோடு ஆட்டோவில் பழங்கள் வாங்குவதற்காக திருச்சிக்கு புறப்பட்டார். லோடு ஆட்டோவை வினோத் ஓட்டினார். தஞ்சை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வல்லம் பைபாஸ் பகுதியில் உள்ள ஒரு கார் ஷோரூம் எதிரே லோடு ஆட்டோ சென்றது.

அப்போது பின்னால் வேகமாக பைக்கில் வந்த அடையாளம் தெரி யாத 2 பேர் லோடு ஆட்டோவை மறித்து டிரைவர் வினோத் முகத்தில் மண்ணை வீசி அரிவாளால் வெட்டினர். இதனால் நிலைகுலைந்து போன வினோத் லோடு ஆட்டோவை நிறுத்தினார். தொடர்ந்து அந்த மர்மநபர்கள் ஆட்டோவில் இருந்த அப்புவை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த அப்பு ரத்த வெள்ளத்தில் அதே இடத்திலேயே இறந்தார். ஆட்டோவை ஓட்டி வந்த வினோத் படுகாயமடைந்தார். ராஜமுருகன் ஆட்டோவில் இருந்து குதித்து ஓடியதால் காயமின்றி தப்பினார். தொடர்ந்து கொலை செய்த நபர்கள் பைக்கை அங்கேயே போட்டுவிட்டு தப்பியோடி விட்டனர்.

தகவல் அறிந்த வல்லம் போலீசார் காயமடைந்த வினோத்தை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்யப்பட்ட அப்புவுக்கும், வேறு சிலருக்கும் இடையே தொழில் போட்டி இருந்து வந்தது தெரியவந்தது.

மேலும் அப்பு கடையில் வியாபாரம் நன்றாக நடக்கிறது. தங்கள் கடையில் வியாபாரம் சரிவர நடக்கவில்லையே என்ற கோபத்தில் போட்டியாளர்கள் இருந்தனர். இதையடுத்து கூலிப்படையை ஏவி அப்புவை தீர்த்து கட்டி உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இந்த கொலையில் தொடர்புடைய நீடாமங்கலத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சேர்ந்த ஸ்ரீராம் (21), 17 வயதுடைய சிறுவன், வலங்கைமான் நார்த்தாங்குடி ராஜேந்திரன் என்பவரின் மகன் அரவிந்த் (27) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக சிலரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story