தஞ்சை வடக்கு மாவட்ட பாமக செயலாளர் ம.க. ஸ்டாலின் கோரிக்கை

தஞ்சை வடக்கு மாவட்ட பாமக செயலாளர் ம.க. ஸ்டாலின் கோரிக்கை

மக ஸ்டாலின் 

தஞ்சாவூர் டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மும்முனை மின்சாரத்தை முழுமையாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஆடுதுறை பேரூராட்சி தலைவரும், தஞ்சாவூர் மாவட்ட பாமக செயலாளருமான ம.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், டெல்டா பகுதிகளான கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மும்முனை மின்சாரம் தட்டுப்பாடும், வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சார தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, திருப்பனந்தாள் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சோழபுரம், அத்தியூர், மகாராஜபுரம், மானம்பாடி, சேங்கனூர், புத்தூர், அணக்குடி, விளந்தகண்டம், கோவிலாச்சேரி, குமரன்குடி, உத்தமதாணி, கல்லூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போதுமான மின்சார வசதி இல்லாததால் பொதுமக்கள் அனைவரும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அரைமணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் குடி தண்ணீர் கூட கிடைக்காமல் பொதுமக்களும், காவிரியில் தண்ணீர் இல்லாததால் மின்சார மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீர் எடுத்து அதனை நம்பி விவசாய பணிகளை மேற்கொண்ட விவசாயிகள் தற்போது தண்ணீர் கிடைக்காமல் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கருகி காய்ந்து போய்விட்டன. இதனால் செய்வதறியாமல் வாழ்வாதாரம் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதே போன்று வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் மிகக்குறைவான திறன் (LOW VOLTAGE) கொண்ட அளவிலேயே தற்போது வழங்கப்படுகிறது. தற்போது கோடை விடுமுறையை கொண்டாட சுற்றுலா தலங்களுக்கு பக்தர்கள் அதிகளவில் வந்த வண்ணம் உள்ளனர். மின் தட்டுப்பாட்டால் கோயில்களுக்கு வரும் பக்தர்களும், பொதுமக்களும் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள், பொதுமக்கள், பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு தஞ்சாவூர் மாவட்ட டெல்டா பகுதிகளாக கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் சுற்று வட்டார பகுதிகளில் முழுமையாக மின்சாரம் வழங்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், உடனடியாக மின்தட்டுப்பாட்டை போக்கி முழுநேரம் மின்சாரம் வழங்கவில்லை எனில் கும்பகோணம் உதவி மின் செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன போராட்டம் நடத்தப்படும் என இதன் வாயிலாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story