தென்காசியில் தபால் வாக்குகள் பதிவுசெய்யும் பணி
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடம் தேடிச் சென்று அவர்களிடம் தபால் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் புதிய நடைமுறையை கொண்டு வந்தது. முதல் முறையாக முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடம் தேடி சென்று தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் தபால் வாக்குபதிவு செய்யப்பட்டு வாக்குகள் சேகரிக்கும் பணி சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று துவங்கியது.
இதனை தொடர்ந்து வாக்குப் பெட்டிகள் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முன்னிலையில் சீல் வைத்து பூட்டப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் வாகனங்கள் மூலம் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது. சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் 10 பாகங்களாக பிரிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள 94 மாற்றுத் திறனாளிகள் மற்றும் 132 மூத்த குடிமக்கள் இருக்கும் இடம் தேடிச் சென்று அவர்கள் இல்லங்களில் வைத்து தேர்தல் நடத்தும் அதிகாரி முன்னிலையில் படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு பின்னர் தபால் வாக்குப் பதிவு நடைபெற்றது.
தொடர்ந்து ஒவ்வொரு பகுதியிலும் காவல்துறை பாதுகாப்புடன் தபால் வாக்குகள் பதிவு செய்யும் பணியில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர். மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை இருக்கும் இடம் தேடிச் சென்று தபால் வாக்கு பெறப்படும் முறையை தேர்தல் ஆணையம் கொண்டு வந்திருப்பது தங்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாகவும் உதவிகரமாக ' இருப்பதாகவும் தெரிவித்தனர்.