டாஸ்மாக் கடைக்கு திருஷ்டி கழித்த வினோத சம்பவம்.
டாஸ்மாக் கடை
பூந்தமல்லி நெடுஞ்சாலை வானகரம் பகுதியில் அரசு மதுபானக் கடை அமைந்துள்ளது. இந்தக் கடை இன்று மதியம் 12 மணியளவில் வழக்கம்போல் திறக்கப்பட்டது. அப்போது பாரில் வேலை செய்யும் நபர் ஒருவர் இன்று அமாவாசை என்பதால் தேங்காய், எலுமிச்சை, பூசணிக்காய் உள்ளிட்டவற்றைகொண்டு டாஸ்மாக்கிற்கு கற்பூரம் காட்டி திருஷ்டி கழித்தார்.
கடைக்கு மட்டுமின்றி கடையில் மது அருந்தும் மதுப்பிரியர்களுக்கும் சேர்த்து அவர் திருஷ்டி கழித்த சம்பவம் காண்போரின் கவனத்தை ஈர்த்தது. திருஷ்டி கழிக்கப்படுவதைக் கண்டு மதுப்பிரியர்கள் சிலர் புன்னகையித்தபடி கடந்து சென்றனர். மதுபானங்கள் அதிக அளவில் விற்க வேண்டும் என்பதற்காகவும், அதை வாங்கிப் பருகும் மதுப்பிரியர்களின் உடல்நலமும் சிறப்பாக இருக்க வேண்டும் எனவும் வேண்டிக்கொண்டு இந்த திருஷ்டியை கழித்ததாக அந்த நபர் கூறினார்.
வெயில் காலத்தில் குறிப்பாக பீர் வகை மதுபானங்கள் அதிக அளவில் விற்பனையாவதால், அதன்மீது விழுந்துள்ள கண் திருஷ்டி கழிய வேண்டும் என்ற நோக்கத்தில் இதை செய்ததாகவும் குறிப்பிட்டார். அமாவாசையை முன்னிட்டு நிறுவனங்கள், வீடுகள், வாகனங்களுக்கு திருஷ்டி கழிக்கப்படுவது வழக்கம் என்றாலும், டாஸ்மாக் கடைக்குமா? என காண்போர் பலர் கேள்வி எழுப்பியபடி கடந்து சென்றனர்.