டாஸ்மாக் கடையை மூடக்கோரி பிப். 28 முதல் தொடா் போராட்டம்
டாஸ்மாக் மூடக்கோரி போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடை அருகில் நவத்திருப்பதி கோவில்களில் ஒன்றான மகர நெடுங்குழைகாதா் கோவில், நவ கைலாய கோவில்களில் ஒன்றான சிவன்கோவில், பேரூராட்சி அலுவலகம் மற்றும் ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பேருந்து நிறுத்தமும் உள்ளது.
இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜகவினா் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனா்.
அப்போது, திருச்செந்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் 40 நாட்களில் உரிய முடிவெடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் தெற்கு மாவட்ட பாஜக தலைவா் சித்ராங்கதன் தலைமையில் தென்திருப்பேரை டாஸ்மாக் கடை முன்பு பிப். 13ம் தேதி பாஜகவினா் முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஏரல் வட்டாட்சியா் கோபால் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, இரண்டு நாட்களில் திருச்செந்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடத்தி அதில் முடிவெடுக்கப்படும் என உறுதி அளித்தாா். இதன்படி பிப். 15ம் தேதி கோட்டாட்சியா் குரு சந்திரன் தலைமையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் பத்து நாட்களில் தென்திருப்பேரையில் டாஸ்மாக் கடை மூடப்படும் என முடிவெடுக்கப்பட்டது.
ஆனால், சமாதான கூட்டத்தில் உறுதி அளித்தபடி பிப். 25ம் தேதி டாஸ்மாக் மதுபான கடை மூடப்படாமல் திறக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து தெற்கு மாவட்ட பாஜக தலைவா் சித்ராங்கதன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ஆழ்வாா்திருநகரி காவல் நிலையத்திற்கு பாஜகவினா் சென்றனா்.
அங்கு பாஜக மண்டல தலைவா் குமரேசன் அளித்துள்ள புகாா் மனுவில் கூறியிருப்பதாவது, தென்திருப்பேரையில் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி திருச்செந்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் பிப்ரவரி 25ஆம் தேதி கடை மூடப்படும் என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி பிப்ரவரி 25ஆம் தேதி கடை மூடப்படாமல் கடையை திறந்து வைத்திருப்பதால் டாஸ்மாக் மேலாளா் மற்றும் கடை சூப்பா்வைசா் நயினாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
புகாா் மனு குறித்து தெற்கு மாவட்ட பாஜக தலைவா் சித்ராங்கதன் கூறுகையில், தென்திருப்பேரையில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி பாஜக நடத்திய போராட்டத்தின் போது உறுதி அளித்தபடி கடையை மூடவில்லை. பிப்.15ம் தேதி திருச்செந்தூரில் கோட்டாட்சியா் முன்னிலையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் பிப்.25ம் தேதி முதல் டாஸ்மாக் கடை அந்த இடத்தில் இயங்காது என்று எழுத்து பூா்வமாக கோட்டாச்சியா் முன்னிலையில் கையெழுத்து ஆனது. ஆனால் டாஸ்மாக் நிா்வாகம் கோட்டாட்சியா் உத்தரவை மதிக்காமல் பிப். 25ம் தேதி டாஸ்மாக் கடையை திறந்து வைத்துள்ளது.
எனவே கோட்டாச்சியா் உத்தரவை மதிக்காத டாஸ்மாக் நிா்வாகி ஆறுமுக நயினாா் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என ஆழ்வாா்திருநகரி காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளோம். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வருகின்ற பிப். 28ம் தேதி அன்று பிரதமா் மோடி தூத்துக்குடி வந்து சென்ற பிறகு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டா்களுடன் டாஸ்மாக் கடை இழுத்து மூடும் வரை போராட்டம் நடத்தப்படும் என்றாா்.