பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; டாஸ்மாக் ஊழியர்கள் முதல்வருக்கு கடிதம்
பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில், தஞ்சாவூர் தபால் நிலையத்தில் இருந்து தமிழக முதல்வருக்கு தபால் மூலம் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. நிகழ்ச்சிக்கு, டாஸ்மாக் ஊழியர் சங்கம் சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.வீரையன் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் துவக்கி வைத்துப் பேசினார்.
தஞ்சாவூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் தமிழக முதலம்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசின் மது விலக்கு மற்றும் ஆயத்த தீர்வைத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மதுபான சில்லறை விற்பனைக் கடையில் தொடர்ந்து இருபது ஆண்டுகளாக பணிபுரிந்து வருபவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.12 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு இயற்றியுள்ள 1981 ஆம் ஆண்டு பணி நிரந்தர தகுதி வழங்கல் சட்டப்படி இரண்டு ஆண்டுகளில் 480 நாட்கள் பணி புரிந்துள்ளோம் ஆனால் இன்னும் பணி நிரந்தரப்படுத்தவில்லை எட்டு மணி நேரத்திற்கும் மேலாக மேலாகவும், வார விடுமுறை இன்றியும் தேசிய பண்டிகை விடுமுறை நாட்களிலும் பணிபுரிந்து வருகிறோம்.
ஆனால் சட்டப்படியான பணப்பயன்கள் வழங்கப்படவில்லை. தமிழக அரசுக்கு சொந்தமான அமுதம் அங்காடிகள், பூம்புகார் கைவினை கடைகள், ஆவின் போன்ற நுகர்வு பொருட்களை விற்பனை செய்யும் பணியில் உள்ள ஊழியர்களுக்கு, அரசு ஊழியருக்கு இணையான காலமுறை ஊதியமும், பணி நிரந்தரமும் உள்ளது. அவர்களைப் போன்று விற்பனையில் ஈடுபட்டுள்ள எங்களுக்கு இது நாள் வரை காலமுறை ஊதியமும் வழங்கப்படவில்லை. பணி நிரத்தரமும் செய்யப்படவில்லை.
அரசுத்துறைகள் மற்றும் அரசு நிறு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான ஓய்வு வயது 60ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், நாங்கள் பணிபுரியும் டாஸ்மாக் நிறுவனத்தில் ஓய்வு வயது 50 ஆக உள்ளது. எனவே தமிழ்நாடு முதலமைச்சர் எங்களது பிரச்னையில் நேரடியாக தலையிட்டு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், சட்டப்படியான உரிமைகளை வழங்க ஆவண செய்ய வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நிகழ்வில், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் மதியழகன்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.