மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர்

குன்னூரில் பயிற்சி வகுப்புக்கு வந்த 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இசை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 17 வயது மாணவி தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய தந்தை, மாணவி 7 மாத குழந்தையாக இருந்தபோது இறந்து விட்டதால், மாணவியின் தாயார் அதே பகுதியை சேர்ந்த மற்றொருவரை திருமணம் செய்து கொண்டார். பத்தாம் வகுப்பு மாணவி, தாய் மற்றும் வளர்ப்பு தந்தையுடன் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார். பள்ளி மாணவிக்கு இசை வகுப்பில் சேர ஆர்வம் இருந்தது. இதனால் பெற்றோர்களிடம் அனுமதி வாங்கி குன்னூர் அருகே உள்ள ஒரு இசை பள்ளியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் இசை ஆசிரியர் பிரசாந்த் செபாஸ்டியன் மாணவியுடன் பழகி அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளான். தொடர்ந்து மாணவி இசை வகுப்புக்கு வந்த போது, மற்ற மாணவர்கள் இல்லாத போதும் பலமுறை பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இந்நிலையில் கடந்த 3ம் தேதி மாணவியின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மாணவி குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பரிசோதனையில் மாணவி 9 வார கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் குன்னூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கோமதி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து இசை ஆசிரியர் பிரசாந்த் செபாஸ்டியனை கைது செய்தனர். இசை கற்றுக்கொள்ள வந்த மாணவிக்கு இசை ஆசிரியரே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நீலகிரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story