பார்வைத்திறன் குறையுடையோருக்கான பள்ளியில் ஆசிரியர் காலிப்பணியிடம்
மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனகரத்தின் கீழ் செயல்பட்டு வரும், தஞ்சாவூர் பார்வைத் திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள, 3 முதுகலைப் பாட ஆசிரியர், 3 பட்டதாரி ஆசிரியர் மற்றும் 3 இடைநிலை ஆசிரியர் ஆகிய பணியிடங்கள், மதிப்பூதிய அடிப்படையில், முழுமையான கல்வித் தகுதி கொண்ட நபர்களைக் கொண்டு நிரப்பிக் கொள்ள, பள்ளி மேலாண்மைக் குழுவின் வாயிலாக முடிவு செய்யப்பட்டு, இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது.
பெறப்படும் விண்ணப்பங்களில், பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான தேர்வுக் குழுவின் மூலம் நடத்தப்படும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில், முற்றிலும் தற்காலிக அடிப்படையில் பதவி நியமனம் செய்யப்பட உள்ளது. இதில், முதுகலை பாட ஆசிரியர் பிரிவில் புவியியல், பொருளியல், கணினி பயன்பாடு ஆகியவற்றிற்கு தலா ஒரு காலிப்பணியிடங்களும், பட்டதாரி ஆசிரியர் பிரிவில் தமிழ், கணிதம், அறிவியல் ஆகியவற்றிற்கு தலா ஒரு காலிப் பணியிடங்களும், இடைநிலை ஆசிரியர் பிரிவில் மூன்று காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது.
இதற்கு உரிய கல்வித் தகுதிகளுடன் தேர்வு செய்யப்படும், முதுகலை பாட ஆசிரியர்களுக்கு மதிப்பூதியமாக 18, ஆயிரம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மதிப்பூதியமாக 15 ஆயிரம், இடைநிலை ஆசிரியர்களுக்கு மதிப்பூதியமாக 12 ஆயிரம் வழங்கப்படும். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த, தகுதி வாய்ந்த நபர்கள் தங்களது விண்ணப்பங்களை, தஞ்சாவூர் பார்வைத் திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில், 09.01.2024 நேரடியாகவோ அல்லது தபால் மூலமாக ஒப்படைத்து, பின்னர் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.