ஆசிரியர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் - தீர்மானங்கள் நிறைவேற்றம்

ஆசிரியர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் - தீர்மானங்கள் நிறைவேற்றம்
X

ஆசிரியர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்

1-5 வகுப்பு மாணவர்களுக்கு வினாத்தாள்களை கல்வித்துறையே வழங்க வேண்டும் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தீர்மானம்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமையில் நடந்தது. மாநில துணைத்தலைவர் ஆரோக்கியராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஞான அற்புதராஜ், ஜோசப் ரோஸ், குமரேசன், மாவட்ட துணை தலைவர்கள் ரவி, மாலா, மாவட்ட துணை செயலாளர்கள் ஜான் அந்தோனி, அமலசேவியர், கல்வி மாவட்ட செயலாளர்கள் சிங்கராயர், சகாய தைனேஸ், ஜெயக்குமார், கல்வி மாவட்ட தலைவர் ஜோசப் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் பருவத் தேர்வு டிசம்பர் 15 முதல் 22 வரை நடக்க உள்ளது. இத்தேர்வுகள் கடந்த முறை ஆன்லைன் செயலி மூலம் நடைபெற்றது. ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்.

அதே வேளையில் வினாத்தாள்களை தேர்வு நடக்க இருக்கும் ஒவ்வொரு நாளுக்கு முந்தைய நாள் பிற்பகலில் இணைய செயலி மூலம் பதிவிறக்கம் செய்து மாணவர்களின் தர நிலைக்கேற்ப நகலெடுத்து தேர்வு நடத்த வேண்டுமென தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மேலும் வினாத்தாள்களை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும், எந்த விதத்திலும் வினாத்தாள்கள் வெளியில் கசிய கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார். ஆரம்பப் பள்ளிகளில் இணையத் தொடர்பு மற்றும் பிரிண்டர் வசதி இல்லை. பெரும்பாலான பள்ளிகள் ஈராசிரியர், ஓராசிரியர் பள்ளிகளாக குக்கிராமங்களில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஒவ்வொரு நாளும் வினாத்தாள்கள் நகலெடுக்க தனியார் கணினி மையங்களை நாட வேண்டி வரும். அருகில் உள்ள நடுநிலைப் பள்ளிகளில் தினமும் சென்று நகலெடுப்பது என்பது இயலாத காரியம். எனவே ஒவ்வொரு பள்ளிகளுக்கும் தேவையான வினாத்தாள்களை கல்வித்துறை நேரடியாக வழங்க வேண்டும். மேலும் 1 முதல் 5 வகுப்புகளுக்கு மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு முறை என்பது தேசியக் கல்விக் கொள்கையை மறைமுகமாக புகுத்தும் செயலாகவே தெரிகிறது. மாநிலக் கல்வி குழு அமைத்த பின்னர் வெவ்வேறு பெயர்களில் தேசியக் கல்விக் கொள்கை மறைமுகமாக புகுத்தப்பட்டு வருகிறது. இதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

மேலும் ஊக்க ஊதியம் சம்பந்தமான தமிழக அரசு அறிவித்த தேதிக்குள் உயர் கல்வி பயின்றவர்களுக்கு இது வரை ஊக்க ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பதால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு உரிய தீர்வை காண வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story